2023 ஆண்களுக்கான வளர்ந்து வரும் அணிகள் ஆசியக் கோப்பையின் அரையிறுதியில் இந்தியா ஏ 51 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச ஏ அணியை வென்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 212 ரன்கள் இலக்கை நிர்ணயித்தது. பதிலுக்கு வங்கதேச ஏ அணி 160 ரன்களுக்கு சுருண்டது. இப்போது இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் ஏ அணியை இந்தியா ஏ எதிர்கொள்கிறது. முதல் அரையிறுதியில் பாகிஸ்தான் ஏ அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை ஏ அணியை வீழ்த்தியது. இந்திய அணிக்காக அரையிறுதியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார் நிஷாந்த் சிந்து.
போட்டி விவரம்:
முதலில் பேட் செய்த இந்தியா ஏ அணி 49.1 ஓவரில் 211 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் போது யாஷ் துல் கேப்டன்சி இன்னிங்சை விளையாடினார். அவர் 85 பந்துகளில் 66 ரன்கள் எடுத்தார். யாஷ் 6 பவுண்டரிகளை அடித்தார். அபிஷேக் சர்மா 63 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் உதவியுடன் 34 ரன்கள் எடுத்தார். தொடக்க ஆட்டக்காரர் சாய் சுதர்ஷன் 24 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தார். அவரது இன்னிங்ஸில் 3 பவுண்டரிகள் மட்டுமே வந்தது. ரியான் பராக் வழக்கம்போல் சிறப்பாக எதுவும் செய்யவில்லை. அவர் 12 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். நிகின் ஜோஸ் 17 ரன்கள் எடுத்தார். மானவ் சூதர் 21 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இந்தியா கொடுத்த இலக்கை துரத்திய வங்கதேச அணி 160 ரன்களுக்கு சுருண்டது. அதற்கு தன்ஜிம் ஹசன் அபாரமாக விளையாடி 56 பந்துகளை சந்தித்து 8 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் அடித்தார். மொஹமட் நயீம் 38 ரன்கள் அடித்து தனது இன்னிங்ஸை முடித்து கொண்டார். கேப்டன் சைஃப் ஹசன் 22 ரன்களிலும், ஹசன் ஜாய் 20 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் வங்கதேசம் 51 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்திக்க வேண்டியிருந்தது. இப்போது இறுதிப் போட்டியில் இந்தியா பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
இந்திய அணிக்காக நிஷாந்த் சிந்து அபாரமாக பந்துவீசினார். அவர் 8 ஓவர்களில் 20 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளையும், மானவ் சூதர் 8.2 ஓவர்களில் 32 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அபிஷேக் சர்மா 3 ஓவர்களில் 21 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். யுவராஜ் சிங் தோடியா 7 ஓவர்களில் 35 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.