பேட்டிங்கை பொறுத்தவரை விராட் கோலியின் உலகத்தரம் நம் அனைவருக்கும் தெரியும், ஆனால் அவரது சக வீரர்களை ஆச்சரியப்படுத்தும் மற்றொரு விஷயம், அவரது சொந்த பந்து வீச்சின் மீது அவர் கொண்டிருக்கும் அபரிமிதமான நம்பிக்கைதான். 


மல்யுத்த வீரர் ஆகியிருக்கலாம்


கோலி, களத்தில் மிகவும் உணர்ச்சி மிக்கவராக நமக்கு தெரியும். எந்த விதத்திலும் களத்தில் சண்டை செய்ய தயங்காதவர்தான் கோலி. 2023 ஐபிஎல் களத்திலேயே சமீபத்தில் பலர் அதனைப் பார்த்திருக்கலாம். இதனை சம்பந்தப்படுத்தி கிரிக்கெட் வீரர் புவனேஷ்வர் குமார், கோலி குறித்த கேள்வி ஒன்றிற்கு பதில் கூறியுள்ளார். கோலி கிரிக்கெட் வீரராக ஆகாமல் இருந்திருந்தால் என்னவாக ஆகி இருக்கலாம் என்ற கேள்விக்கு, ரெஸ்ட்லிங்கில் சிறந்து விளங்கி இருப்பார் என்று கூறியுள்ளார். 



அணியின் சிறந்த பந்துவீச்சாளர் என்று நினைக்கிறார்


புவனேஷ்வர், "கோலி தனது கிரிக்கெட் வாழ்வையும், தன் நாட்டிற்காக ஆடுவதையும் அவ்வளவு விரும்புகிறார். ஜிம்மில் வியர்க வியர்க பயிற்சி செய்வதில் இருந்து களத்தில் பயிற்சி செய்வது வரை அவ்வளவு ஈடுபாட்டுடன் இருப்பார்," என்று அவரிடம் உள்ள நல்ல குணங்கள் பற்றி குறிப்பிட்டார். மேலும் புவி, கோலி குறித்து பேசிய விஷயங்கள், அவர் குறித்து பலரும் அறிந்திராத பல விஷயங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. "விராட் கோலி தன்னைத் தானே அணியில் சிறந்த பந்துவீச்சாளர் என்று நினைத்துக்கொண்டுள்ளார்" என்று மும்பையில் நடந்த ஒரு நிகழ்வில் புவனேஷ்வர் குமார் வெளிப்படுத்தினார். 


தொடர்புடைய செய்திகள்: Tilak Varma: ஆசியக்கோப்பை அணியில் திலக் வர்மா… ஏன் இவ்வளவு விமர்சனம்? மூன்று முக்கிய காரணங்கள் இதுதான்!


அதில் எங்களுக்குத்தான் கவலை


அவருடைய இந்த தன்னம்பிக்கையால் அணிக்கு இதுவரை எந்த பிரச்சனையும் இல்லை, எங்களுக்குதான் சில கவலைகள் உள்ளன என்று மேலும் குறிப்பிட்டார் புவனேஷ்வர். "பயிற்சியின் போது, விராட் பந்துவீசும்போது நாங்கள் பயப்படுவோம். ஏனெனில் அவரது பந்து வீச்சு ஆக்ஷன் தாறுமாறாக இருக்கும். அதனால் அவருக்கு காயம் ஏற்பட்டு விடுமோ என்ற கவலை எங்களுக்கு இருக்கும்," என்று புவனேஷ்வர் கூறினார். மேலும் கோலி உச்சகட்ட உற்சாகத்தில் பந்துவீசுவதால் அதில் காயம் ஏற்பட நிறைய வாய்ப்புகள் இருப்பதாக குறிப்பிட்டார்.



கோலிக்கு காத்திருக்கும் சாதனைகள்


பேட்டிங்கைப் பொறுத்தவரை, கோலியின் சாதனைகள் குறிப்பிடத்தக்கவை. அவர் எல்லா வகையான கிரிக்கெட்டிலும் சேர்த்து, 76 சதங்களைக் குவித்துள்ளார். ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக. டெண்டுல்கரின் 100 சர்வதேச சதங்கள் என்ற சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ள ஒரே நபராக கோலி இருக்கிறார். அதோடு மற்றொரு டெண்டுல்கரின் பெரிய சாதனையும் கோஹ்லியின் பிடியில் உள்ளது. ODIகளில், கோஹ்லி 46 சதங்களை அடித்துள்ளார். டெண்டுல்கரின் 49 சதங்களை விட 3 சதங்கள் மட்டுமே பின்தங்கிய நிலையில் உள்ளார். கோஹ்லி தனது சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்தால், வரவிருக்கும் மாதங்களில் நடைபெற உள்ள, ஆசிய கோப்பை மற்றும் உலகக் கோப்பைக்குள் அவரை சமன் செய்ய முடியும். கூடுதலாக ஒன்று அடித்தால், 50 சதங்கள் அடித்த ஒரே வீரர் என்ற அசைக்க முடியாத சாதனையையும் படைக்க வாய்ப்புள்ளது. அவரது ரசிகர்களும் அதனை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.