ஆசியக் கோப்பை இறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் அக்சர் படேலுக்குப் பதிலாக வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளார்.


இலங்கைக்கு எதிரான ஆசியக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னதாக, அக்சர் பட்டேலுக்குப் பதிலாக ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதன்மூலம், அக்சர் படேலுக்குப் பதிலாக வாஷிங்டன் சுந்தர் இறுதிப் போட்டியில் விளையாடலாம் என்று நம்பப்படுகிறது. 






சீனாவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டியில் கிரிக்கெட் அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழக ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் தற்போது பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் (என்சிஏ) பயிற்சி பெற்று வருகிறார். விளையாட்டுக்கான முகாம் செப்டம்பர் 23 வரை நடைபெற உள்ளது. அதன் பின்னர் இந்திய கிரிக்கெட் குழு சீனாவுக்குச் செல்ல இருக்கிறது. இந்தநிலையில், ஆசியக் கோப்பை சூப்பர் 4 வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் அக்சர் படேல் கையில் காயம் ஏற்பட்டது. காயத்துடன் விளையாடி 34 பந்துகளில் 42 ரன்கள் எடுத்த அக்சர் படேலால், இந்திய அணியை வெற்றிபாதைக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை. இதனுடன் அக்சர் படேல் 9 ஓவர்களில் 47 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.


வாஷிங்டன்  சுந்தர் கடைசியாக ஜனவரி மாதம் நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடினார். அந்தத் தொடரில் இரண்டு போட்டிகளில் விளையாடி 9 மற்றும் 12 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதன்பிறகு, பாண்டிச்சேரியில் நடந்த தியோதர் டிராபியில் வாஷிங்டன் சுந்தர் தென் மண்டல அணிக்காக விளையாடினர், இந்த அணி கோப்பையையும் வென்றது. கிழக்கு மண்டலத்திற்கு எதிரான இறுதிப் போட்டியில் வாஷிங்டன் சுந்தர் முக்கியமான நேரத்தில் விக்கெட்களை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. 


2023 ஆசியக் கோப்பையின் கடைசி சூப்பர் 4 ஆட்டத்தில் வங்கதேசத்துக்கு எதிராக இந்திய அணி தோல்வியை சந்திக்க வேண்டியிருந்தது. இந்தப் போட்டியின் மூலம் இந்திய அணி தனது பெஞ்ச் வலிமையை சோதித்தது. விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இவர்கள் இல்லாததால், விளையாடிய இந்திய அணியில் திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் மற்றும் முகமது ஷமி இடம் பெற்றனர். ஆனால் இந்த போட்டியில் இந்திய அணியால் வெற்றி பெற முடியவில்லை. முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 265 ரன்கள் எடுத்தது. பதிலுக்கு இந்திய வீரர்களால் 259 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.


இறுதிப்போட்டி: 


ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 4 புள்ளிகளுடன் முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. சூப்பர்-4 சுற்றில் இந்திய அணி, பாகிஸ்தான் மற்றும் இலங்கையை வீழ்த்தி அசத்தியது. ஆனால், வங்கதேசத்துக்கு எதிராக ரோஹித் சர்மா அணி தோல்வியை சந்தித்து அதிர்ச்சியை அளித்தது.இந்தப் போட்டிக்கு முன்பே இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற இந்திய அணி, நாளை இறுதிப்போட்டியில் தசுன் சனகா தலைமையிலான இலங்கை அணியை எதிர்கொள்கிறது. இதையடுத்து பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் சூப்பர் 4 சுற்றுகளுடன் வெளியேறியது.