வங்கதேசத்திற்கு எதிரான நேற்றைய போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்த தோல்விக்கு பிறகு ரோஹித் சர்மா தலைமையிலன இந்திய அணியின் பேட்டிங் மீது கேள்விகள் எழுந்தது. தொடர்ந்து, இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் மீது விமர்சனங்களும் எழுகின்றனர்.
வங்கதேசத்திற்கு எதிரான குரூப் 4 சுற்றில் சூர்யகுமார் யாதவ் 34 பந்துகளில் 26 ரன்கள் மட்டுமே எடுத்து க்ளீன் போல்டானார். இதன் மூலம் ஒருநாள் போட்டியில் இவரது மோசமான ஃபார்ம் தொடர்கிறது.
ஒருநாள் போட்டியில் சூர்யகுமார் யாதவ்:
இந்தியாவுக்காக சூர்யகுமார் யாதவ் இதுவரை 27 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 537 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதில், இவரது சராசரி 24,41 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 99.81 ஆகவும் இருந்துள்ளது. சூர்யகுமார் யாதவ் ஒருநாள் போட்டியில் இரண்டு முறை ஐம்பது ரன்களை கடந்துள்ளார், ஆனால் இதுவரை சதம் அடிக்க முடியவில்லை. சூர்யகுமார் யாதவின் T20 சாதனை பாராட்டுக்குரியதாக இருந்தாலும், ஒருநாள் போட்டியில் அவரது பார்ம் பாவமாகவே இருந்துள்ளது.
ஷ்ரேயாஸ் ஐயருக்கு என்ன ஆனது..?
வங்கதேசத்திற்கு எதிரான நேற்றைய போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை என தொடர்ந்து கேள்வி எழுந்து வருகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்பியுள்ள ஷ்ரேயாஸ் ஐயர், இப்போது முழு உடல் தகுதியுடன் இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை சூப்பர்-4 போட்டியில் முதுகு வலி காரணமாக வெளியே அமர வைக்கப்பட்டார்.
2023 ஆசிய கோப்பையில் 2 போட்டிகளில் விளையாட ஷ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த இரண்டு போட்டிகளும் குரூப் ஸ்டேஜ் ஆட்டங்களாக இருந்தன, அதில் ஒன்று பாகிஸ்தானுக்கு எதிராகவும் மற்றொன்று நேபாளத்திற்கு எதிராகவும் இருந்தது. பாகிஸ்தானுக்கு எதிராக பேட்டிங் செய்யும் போது ஐயர் 14 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், நேபாளத்துக்கு எதிரான போட்டியில் அவருக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை.
ஷ்ரேயாஸ் ஐயரின் முதுகு வலி பிரச்சனை, வரவிருக்கும் ஒருநாள் உலகக் கோப்பை 2023 க்கு முன்னதாக இந்திய அணிக்கு கவலையை அளிக்கிறது. வங்கதேசத்துக்கு எதிரான போட்டியைப் பொறுத்தவரை, ஷ்ரேயாஸ் ஐயர் முழு உடல் தகுதியுடன் களம் திரும்புவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர், ஆனால் இந்த போட்டியிலும் அவரை விளையாட வைக்க வேண்டாம் என்று அணி நிர்வாகம் முடிவு செய்தது. ஷ்ரேயாஸ் ஐயர் குறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில், அவர் தொடர்பாக எந்த வித ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை என்றும், அதனால்தான் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயருடன் விளையாட வேண்டாம் என முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே நிலைமை தொடர்ந்தால் 4 மற்றும் 5வது இடத்தில் களமிறங்கும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இல்லாமல் இந்திய அணி தடுமாறும் சூழ்நிலை தொடரும். உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு பிசிசிஐ சூர்யகுமார் யாதவ் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயருக்கு நல்லதொரு முடிவு எடுக்கப்பட வேண்டும்.
இந்திய அணி தோல்வி:
இந்தியா-வங்காளதேசம் இடையிலான ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. முதலில் பேட் செய்த வங்கதேச அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 265 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 266 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. ஆனால் இந்திய அணி 49.5 ஓவர்களில் வெறும் 259 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஷகிப் அல் ஹசன் தலைமையிலான வங்கதேச அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுப்மான் கில் 133 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் உதவியுடன் 121 ரன்கள் குவித்தார். வங்கதேச அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மான் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.