Asia Cup 2023; ஆசிய கோப்பைத் தொடர் கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. 


இதில் இந்தியா பாகிஸ்தான் நேபாளம் ஆகிய அணிகள் குரூப் ‘ஏ’விலும் இலங்கை, வங்காளதேசம் மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் குரூப் ‘பி’யிலும் இடம் பெற்றுள்ளன. குழு அளவிலான போடியில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோதவேண்டும். குரூப் சுற்று முடிவில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். இவ்வகையில் ஏற்கனவே குரூப் ‘ஏ’வில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் முன்னேறியுள்ளது. குரூப் ‘பி’யில் இன்னும் அடுத்த சுற்றுக்கு  பங்களாதேஷ் அணி முன்னேறியுள்ளது. மேலும் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் மற்றொரு அணி எது என்பது முடிவாகாததால், இன்று அதாவது செப்டம்பர் 5ஆம் தேதி இலங்கை மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியின் முடிவைப் பொறுத்து முடிவு செய்யப்படும் என்ற நிலையில் இரு அணிகளும் மோதின. 


பாகிஸ்தானில் உள்ள லாகூர் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் செய்ய முடிவெடுத்தது. அதன்படி இலங்கை அணியின் நிஷ்கண்ணா மற்றும் கருணாரத்னே ஆகிய இருவர் களமிறங்கினர். இருவரும் சிறப்பான முறையில் ரன்கள் சேர்த்தனர். குறிப்பாக கிடைத்த பந்துகளை மட்டும் பவிண்டரிக்கு விரட்டி ஓவருக்கு 6 ரன்கள் என்பதை சிறப்பாக சேர்த்து வந்தனர். இந்நிலையில், போட்டியின் 11வது ஓவரின் 2வது பந்தில் இலங்கை அணி தனது முதல் விக்கெட்டை இழந்தது. அப்போது இலங்கை அணி 63 ரன்கள் சேர்த்திருந்தது. அதன் பின்னர் 86 ரன்களை எட்டுவதற்குள் மேற்கொண்டு இரண்டு விக்கெட்டுகளை இலங்கை அணி இழந்ததால் பெரும் நெருக்கடிக்கு ஆளானது. இலங்கை அணியின் முதல் 3 விக்கெட்டையும் ஆஃப்கானிஸ்தான் அணியின் குல்பதின் கைப்பற்றினார். 


அதன் பின்னர் சேர்ந்த குஷால் மெண்டிஸ் மற்றும் அஷலங்கா ஜோடி சிறப்பாக ரன்கள் சேர்த்தது, குறிப்பாக தவறாக வீசப்பட்ட பந்துகளை பவுண்டரிக்கும் சிக்ஸருக்கும் விளாசினர். அதிரடியாக அடிவந்த மெண்டிஸ் அரைசதம் கடந்து வேகமாக ரன்கள் சேர்த்து வந்தார். இவர்கள் இருவரும் 4வது விக்கெட்டுக்கு 102 ரன்கள் சேர்த்த நிலையில் அசலங்கா தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். அதன் பின்னர் போட்டியில் மெல்ல மெல்ல ஆஃப்கானிஸ்தானின் ஆதிக்கம் அதிகரித்தது. போட்டியின் 39.1வது ஓவரில் இலங்கை அணியினை சிறப்பான முறையில் மீட்டு வந்த குஷால் மெண்டிஸ் தனது விக்கெட்டை நான் - ஸ்ட்ரைக்கர் திசையில் நின்றுகொண்டு இருந்தபோது எதிர்பாராதவிதமாக ரன் அவுட் ஆனார். இவர் 84 பந்தில் 6 பவுண்டரி 3 சிக்ஸர் என மொத்தம் 92 ரன்கள் சேர்த்திருந்தார். 


அதன் பின்னர் இலங்கை அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 291 ரன்கள் சேர்த்தது. ஆஃப்கானிஸ்தான் அணி சார்பில் குல்பதின் மற்றும் ரஷித் கான் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.