ஆசியக் கோப்பைத் தொடர் கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி முதல் தொடங்கியது. இதில் பாகிஸ்தான் இலங்கை ஆகிய நாடுகள் இந்த ஆண்டு தொடரை நடத்துகின்றன. இதில் இந்த இரண்டு நாடுகளுடன் இந்தியா, நேபாளம், வங்காளதேசம் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளும் களமிறங்கியுள்ளன. இதில் குரூப் ஏ மற்றும் குரூப் பி என ஒரு குழுவிற்கு 3 அணிகள் என பிரிக்கப்பட்டுள்ளது. 6 லீக் போட்டிகள் உட்பட 13 போட்டிகளை கொண்ட இந்த தொடர் வரும் செப்டம்பர் 17ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதுவரை 4 லீக் போட்டிகள் நடந்து முடிந்த நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி மட்டும் மழையால் கைவிடப்பட்டது.
இந்நிலையில் இன்று அதாவது செப்டம்பர் 4ஆம் தேதி இந்தியா மற்றும் நேபாளம் அணிகள், பல்லேகேலே மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச முடிவு செய்தது. நேபாளம் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய குஷால் மற்றும் ஆசிஃப் ஷேக் நிதானமாக ஆடினர். தொடக்கத்தில் இந்திய அணி நேபாளம் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கொடுத்த மூன்று கேட்ச் வாய்ப்புகளையும் தவறவிட்டனர். இதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட இவர்கள் இருவரும் 10வது ஓவர் வரை சிறப்பாக ஆடினர். அதன் பின்னர் இந்த ஜோடி நிதானமாகவும் கிடைத்த பந்துகளை பவுண்டரிக்கு விரட்டியும் ரன்கள் சேர்த்து வந்தது.
அதன் பின்னர் குஷால், பீம், ரோகித், மல்லா ஆகியோர் தங்களது விக்கெட்டுகளை இழந்தாலும், ஆஷிஃப் ஷேக் மட்டும் நிதானமாக ஆடி வந்தார். 88 பந்தில் 7 பவுண்டரிகள் விளாசி 50 ரன்களை எட்டினார். மேலும் இவர்தான் இந்திய அணிக்கு எதிராக அரைசதம் விளாசிய முதல் நேபாள வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.
நேபாளம் கிரிக்கெட் அணியைப் பொறுத்தவரையில் இந்த போட்டி என்பது இந்திய அணிக்கு எதிரான முதல் சர்வதேச போட்டி ஆகும். இந்த போட்டியிலேயே இந்திய அணியின் பந்து வீச்சை மிகவும் சாதூரியமாக எதிர்கொண்டு அதில் அரைசதம் விளாசியதை நேபாளம் அணி கொண்டாடி வருகின்றது.
சிறப்பாக விளையாடி வந்த இவர், முகமது சிராஜ் பந்து வீச்சில் விராட் கோலியிடம் கோட்ச் கொடுத்து தனது விக்கெட்டை 58 ரன்கள் சேர்த்த நிலையில் இழந்தார்.