ஆசியக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் கோலியின் சாதனையை , பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முறியடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசியக்கோப்பை கிரிக்கெட்:
ஒருநாள் உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் 5-ந் தேதி இந்தியாவில் நடைபெற உள்ளது. அதற்கு முன்னோட்டமாக அமைந்துள்ளது நேற்று தொடங்கிய ஆசியக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர். இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் நேபாளம் ஆகிய 6 அணிகள் இந்த தொடரில் பங்கேற்றுள்ளன. 6 லீக் போட்டிகள் உட்பட 13 போட்டிகளை கொண்ட இந்த தொடர் வரும் செப்டம்பர் 17ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற தொடரின் முதல் போட்டியில் நேபாளம் அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. தொடர்ந்து இன்று நடைபெறும் போட்டியில் இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகள் மோத உள்ளன.
இந்தியா - பாகிஸ்தான் மோதல்:
தொடரில் மிகவும் முக்கியமான போட்டியாக கருதப்படும் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி வரும் செப்டம்பர் 2ம் தேதி அதாவது சனிக்கிழமை நடைபெற உள்ளது. ஆசியாவை சேர்ந்த இரண்டு பெரிய அணிகள் மோதுவதை காண தான் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் காத்திருக்கின்றனர். குறிப்பாக 2019ம் ஆண்டு உலகக்கோப்பை தொடருக்குப் பிறகு, முதன்முறையாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஒருநாள் போட்டிகளில் மோத உள்ளன. இதனால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
கோலியின் சாதனை:
இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கோலியின் சாதனையை, பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முறியடிக்க வாய்ப்புள்ளது. அதன்படி, கோலி கேப்டனாக இருந்தபோது ஒருநாள் போட்டிகளில் வெறும் 36 இன்னிங்ஸ்களில் 2000 ரன்களை கடந்துள்ளார். இதன் மூலம், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக இரண்டாயிரம் ரன்களை குவித்த கேப்டன் என்ற சாதானையை கோலி தன்வசம் வைத்துள்ளார்.
பாபர் அசாம் தகர்க்க வாய்ப்பு:
இதனிடயே, பாகிஸ்தான் அணி கேப்டனாக செயல்பட்டு வரும் பாபர் அசாம் தற்போது வரை 30 இன்னிங்ஸ்களில் 1994 ரன்கள் சேர்த்துள்ளார். செப்டம்பர் 2ம் தேதி நடைபெற உள்ள இந்திய அணிக்கு எதிரான போட்டியில், வெறும் 6 ரன்களை சேர்த்தால் கோலியின் சாதனையை பாபர் அசாம் தகர்க்க முடியும். அதாவது, ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 2000 ரன்களை கடந்த கேப்டன் என்ற கோலியின் சாதனையை முறியடித்து பாபர் அசாம் முதலிடம் பிடிக்கக் கூடும். நேற்று நடைபெற்ற நேபாளம் அணிக்கு எதிரான போட்டியில் பாபர் அசாம் 151 ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது. அதன் மூலம், ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 19 சதங்களை பூர்த்தி செய்த வீரர் என்ற, தென்னாப்ரிக்காவின் முன்னாள் வீரர் ஹசிம் ஆம்லாவின் சாதனையை பாபர் அசாம் முறியடித்தார்.