ஆசிய கண்டத்தில் உள்ள முன்னணி கிரிக்கெட் அணிகள் இணைந்து ஆடும் கிரிக்கெட் தொடராக ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் திகழ்கிறது. ஆசிய கோப்பை தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் பங்கேற்று வருகின்றன. இவர்களுடன் 6வது அணியாக ஐக்கிய அரபு அமீரகம், ஹாங்காங் அணிகளில் ஏதாவது ஒரு அணி இடம்பிடித்து ஆடி வருகின்றன.
ஆசிய கோப்பை தொடர்:
இந்த நிலையில், ஆசிய கோப்பை தொடரில் ஆடுவதற்கான தகுதித்தொடராக ஆசிய கோப்பை பிரிமீயர் தொடர் நடைபெற்றது. இந்த தொடரில் மலேசியா, நேபாளம், சிங்கப்பூர், ஹாங்காங், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், ஓமன், கத்தார், பஹ்ரைன், சிங்கப்பூர், சவுதி அரேபியா ஆகிய அணிகள் களமிறங்கி ஆடி வந்தன.
கடந்த ஏப்ரல் 18-ந் தேதி முதல் நடைபெற்று வந்த இந்த தொடரின் இறுதிப்போட்டியில் நேபாளம் – ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகள் நேற்று நேபாளத்தின் கிரித்திபுரில் களமிறங்கின. ஒருநாள் போட்டியாக நடைபெற்ற இந்த தொடரின் இறுதிப்போட்டியில் முதலில் பேட் செய்த ஐக்கிய அரபு அமீரக அணி 33.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்கள் மட்டுமே எடுத்தது.
நேபாளம் வெற்றி:
இதையடுத்து, 118 ரன்கள் எடுத்தால் தொடரை கைப்பற்றுவதுடன் ஆசிய கோப்பைக்கு தகுதி பெறலாம் என்ற கனவுடன் நேபாளம் அணி களமிறங்கியது. ஆட்டம் தொடங்கிய 2வது ஓவரிலே குஷல் புர்டேல் 1 ரன்னில் அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் மற்றொரு தொடக்க வீரர் ஆசிப் ஷேக் 8 ரன்னில் அவுட்டானார். பின்னர் வந்த கேப்டன் ரோகித் 1 ரன்னில் ஆட்டமிழக்க, 22 ரன்னில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நேபாள அணிக்காக குல்சான்ஜா – பீம்சர்கி ஜோடி சேர்ந்தனர்.
இருவரும் இணைந்து நிதானமாகவும் அதிரடியாகவும் ஆடினர். விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக முதலில் நிதானமாக ஆடிய குல்ஜசன்ஜா அதிரடிக்கு மாறினார். பவுண்டரிகளை விளாசிய அவர் சிக்ஸர்களாக விளாசினார். அவருக்கு பீம் சர்க்கி நல்ல ஒத்துழைப்பு அளித்தார். இதனால், 30.3 ஓவர்களில் நேபாள அணி 118 ரன்களை எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குல்சன்ஜா கடைசி வரை ஆட்டமிழக்காமல் 84 பந்துகளில் 3 பவுண்டரி 5 சிக்ஸர்களை விளாசி 67 ரன்களை எடுத்தார். பீம்சர்க்கி 72 பந்துகளில் 4 பவுண்டரியுடன் 36 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
புதிய வரலாறு:
ஐக்கிய அரபு அமீரகத்தை வீழ்த்தி வெற்றி பெற்றதால் நேபாள அணி வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள ஆசிய கோப்பை தொடருக்கு முதன்முறையாக தகுதி பெற்றுள்ளது. பாகிஸ்தானில் நடைபெற உள்ள ஆசிய கோப்பை தொடரில் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய அணிகள் பங்கேற்கும் பிரிவில் நேபாள அணி பங்கேற்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முதன்முறையாக ஆசிய கோப்பைக்கு தகுதி பெற்றுள்ள நேபாள அணிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
மேலும் படிக்க: LSG vs RCB: 'எட்டுது நம்ம சத்தம்…' கம்பீருக்கு பதிலடி கொடுத்த விராட் கோலி.. சண்டையில் முடிந்த கொண்டாட்டம்!
மேலும் படிக்க: LSG vs RCB: ’என் காலுக்கு கீழதான் நீ..’ ஆப்கானிஸ்தான் இளம் வீரரை தாழ்த்தி பேசினாரா விராட் கோலி..? வைரலாகும் போஸ்ட்!