2018ம் ஆண்டை தொடர்ந்து நடப்பாண்டில் நடைபெற்ற ஒருநாள் போட்டி வடிவிலான, ஆசியக்கோப்பை தொடரையும் கைப்பற்றி ரோகித் சர்மா அசத்தியுள்ளார்.


ஆசியக்கோப்பை தொடர்:


ஆசிய கண்டத்தை சேர்ந்த அணிகளுக்கு இடையேயான ஆசியக்கோப்பை தொடர் கடந்த 39 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. முதலில் ஒருநாள் போட்டி வடிவில் மட்டுமே நடைபெற்று வந்த இந்த தொடர், காலத்திற்கேற்றவாறு மாற்றமடைந்து 2016ம் ஆண்டு முதல் டி-20 வடிவிலும் நடைபெற்று வருகிறது. அதில், இந்தியா மற்றும் இலங்கை அணிகள் அடுத்தடுத்து கோப்பைகளை வென்றுள்ளன. ஆனால், முகமது அசாரூதின் என்ற இந்திய கேப்டன் மட்டுமே, ஒருநாள் வடிவிலான ஆசியக்கோப்பை தொடரை அடுத்தடுத்து இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளார். அந்த வரிசையில், இரண்டாவது வீரராக இணைந்துள்ளார் இந்திய அணியின் தற்போதைய கேப்டன் ரோகித் சர்மா. 


இரண்டே கேப்டன்கள்: 


இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் தலைமையிலான இந்திய அணி, 1991 மற்றும் 1995 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஒருநாள் வடிவிலான தொடர்களில் அடுத்தடுத்து கோப்பையை வென்றது. அவரை தவிர வேறு எந்தவொரு கேப்டனும் ஒருநாள் வடிவிலான ஆசியக்கோப்பை தொடரில் இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றதில்லை. அதேநேரம், 2010ம் ஆண்டு ஒருநாள் வடிவில் நடைபெற்ற ஆசியக்கோப்பை தொடரையும், 2016ம் ஆண்டு டி-20 வடிவில் நடைபெற்ற ஆசியக்கோப்பை தொடரையும், தோனி தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது. இந்த இரு கேப்டன்கள் மட்டுமே ஆசியக்கோப்பை தொடரை மொத்தமாக தலா இரண்டு முறை வென்று இருந்தனர்.


சாதனைப் பட்டியலில் ரோகித் சர்மா:


இந்நிலையில் தான் கடந்த 2018ம் ஆண்டு ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, ஒருநாள் வடிவிலான ஆசியக்கோப்பை தொடரை கைப்பற்றியது. அந்த தொடரில் இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோல்வியயே சந்திக்கவில்லை. அதைதொடர்ந்து தற்போது நடந்து முடிந்துள்ள தொடரிலும், ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்றுள்ளது. இந்த தொடரில் இந்திய அணி ஒரே ஒரு போட்டியில் மட்டுமே தோல்வியுற்றது.இதன் மூலம், ஆசியக்கோப்பை தொடரை அடுத்தடுத்து வென்ற இரண்டாவது கேப்டன், ஆசியக்கோப்பை ஒருநாள் தொடரை இரண்டு முறை வென்ற கேப்டன், ஆசியக்கோப்பை தொடரில் 2 கோப்பைகளை வென்ற மூன்றாவது கேப்டன் எனும் பெருமைகளை கேப்டன் ரோகித் சர்மா பெற்றுள்ளார். ஆசியக்கோப்பை தொடரில் இறுதிப்போட்டிகளில் தோல்வியையே சந்திக்காத நான்காவது இந்திய கேப்டன் என்ற பெருமையையும் ரோகித் சர்மா பெற்றுள்ளார். ஆசியக்கோப்பை தொடரில் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி இதுவரை 12 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில், 10 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், ஒரு போட்டியில் தோல்வியை சந்திக்க, ஒரு போட்டி முடிவை எட்டவில்லை.


இந்தியாவிற்கான ஆசிய கோப்பையை வென்ற கேப்டன்கள்:



  • எம்.எஸ்.தோனி - 3 இறுதிப் போட்டிகளில் 2 வெற்றி (2010 மற்றும் 2016 இல் சாம்பியன்)

  • முகமது அசாருதீன் - 2 இறுதிப் போட்டிகளில் வெற்றி (1991 மற்றும் 1995 இல் வெற்றி சாம்பியன்)

  • ரோகித் சர்மா - 2 இறுதிப் போட்டிகளில் 2 வெற்றி  (2018 மற்றும் 2023 இல் சம்பியன்)

  • திலிப் வெங்சர்கார் தலைமையில் 1988-ல் சாம்பியன்

  • சுனில் கவாஸ்கர் தலைமையில் 1984ல் சாம்பியன்