Siraj ODI record: ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இந்த போட்டி இலங்கையில் உள்ள கொழும்பில் உள்ள பிரம்மதேச மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய இலங்கை அணி, தனது முதல் விக்கெட்டை போட்டியின் முதல் ஓவரில் இழந்தது. முதல் ஓவரை பும்ரா வீச அந்த ஓவரின் மூன்றாவது பந்தில் தொடக்க ஆட்டக்காரர் குஷால் பெராரா தனது விக்கெட்டை இழந்தார். இதுவே இலங்கை அணிக்கு அதிர்ச்சியாக இருந்த நிலையில், அதன் பின்னர் போட்டியின் 4வது ஓவரில்தான் இலங்கை அணி அணுகுண்டு காத்திருந்தது.
அதாவது போட்டியின் 4வது ஓவரில் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். அதாவது 4வது ஓவரின் முதல் பந்தில் பதும் நிஷ்கண்ணா விக்கெட்டையும், மூன்றாவது பந்தில் சமர விக்ரமாவின் விக்கெட்டையும், நான்காவது பந்தில் அசலங்காவின் விக்கெட்டையும், கடைசி பந்தில் தனஞ்செயா டி சில்வாவின் விக்கெட்டையும் கைப்பற்றினார். இதன் மூலம் முகமது சிராஜ் ஒருநாள் தொடரில் அதிவேகமாக 50 விக்கெட்டுகளை கைப்பற்றிய நான்காவது வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
இதைத் தொடர்ந்து சிராஜ் போட்டியின் 6வது ஓவரினை வீசினார். அந்த ஓவரின் 4வது பந்தில் இலங்கை அணியின் துஷன் ஷனகாவின் விக்கெட்டை சிராஜ் கைப்பற்றி அசத்தினார். அதன் பின்னர் போட்டியின் 12வது ஓவரை வீசிய முகமது சிராஜ் அந்த ஓவரின் 2வது பந்தில் குஷால் மெண்டிஸை போல்டாக்கி வெளியேற்றினார். இதன் மூலம் 6 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தியுள்ளார்.
இந்த போட்டி சிராஜின் 29வது சர்வதேச ஒருநாள் போட்டியாகும். இந்த போட்டியில் அவர் கைப்பற்றிய 4வது விக்கெட் மற்றும் அதற்கு முன்னர் அவர் சர்வதேச ஒருநாள் போட்டியில் வீசிய 1002 பந்துகளை கணக்கில் கொண்டு பார்க்கும்போது, மிகவிரைவில் 50 விக்கெட்டுகள் ஒருநாள் கிரிக்கெட் வரிசையில் கைப்பற்றிய பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றார்.
இலங்கை அணி 12 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 39 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அதன் பின்னர் இலங்கை அணி மீளவே முடியாது என்ற நிலை ஏற்பட்டது. போட்டியின் 13வது ஒவரை வீசிய ஹர்திக் பாண்டியாவும் தனது பங்கிற்கு துனித் வெல்லலகேவின் விக்கெட்டை கைப்பற்றினார். அதன் பின்னர் இலங்கை அணி 14வது ஓவரில் 50 ரன்களை எட்டியது. மீண்டும் பந்து வீச வந்த ஹர்திக் பாண்டியா வீசிய 15வது ஓவரில் இலங்கை அணி மீதமிருந்த இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் இலங்கை அணி 15.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 50 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
அதன் பின்னர், களமிறங்கிய இந்திய அணியின் இஷான் கிஷன் மற்றும் சுப்மன் கில் இளம் ஜோடி, 51 ரன்கள் என்ற எளிய இலக்கை 6.1 ஓவர்களில் எட்டினர். இதனால் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது மட்டும் இல்லாமல், ஆசிய கோப்பையையும் 8வது முறையாக கைப்பற்றியது. இந்த வெற்றி மூலம் இந்திய அணி அதிக பந்துகளை மீதம் வைத்து ஒருநாள் போட்டி வரிசையில் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. அதாவது, இந்த போட்டியில் இந்திய அணி 6.1 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியதால், 263 பந்துகளை மீதம் வைத்து வெற்றி பெற்றுள்ளது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய சுப்மன் கில் 19 பந்தில் 6 பவுண்டரியுடன் 27 ரன்களும், இஷான் கிஷன் 18 பந்தில் 3 பவுண்டரியுடன் 23 ரன்களும் எடுத்தனர். இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசிய முகமது சிராஜ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.