Asia Cup 2023: கிரிக்கெட் உலகம் மிகவும் எதிர்பார்க்கும் கிரிக்கெட் தொடர்களில் ஆசியக் கோப்பைத் தொடரும் ஒன்று. இந்த கிரிக்கெட் தொடரில் ஆசியாவில் உள்ள மிகவும் பலமான அணிகளாக உள்ள இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட அணிகளின் ஆட்டம் என்பது எப்படி உள்ளது, ஆசிய கண்டத்தில் நாம் விளையாடச் சென்றால் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்பதை மற்ற கிரிக்கெட் நாடுகள் கூர்மையாக கவனிக்கும். இப்படி கவனிக்கப்படும் ஆசியக் கோப்பைத் தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதுவது ரசிகர்கள் மத்தியில் கிரிக்கெட் ட்ரீட் என்பதுபோல ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் இதற்காக தவம் இருப்பது போல காத்திருப்பர் என்றே கூறலாம்.
இந்தியா - பாகிஸ்தான்
ஆசியக் கோப்பைத் தொடரோ உலகக்கோப்பைத் தொடரோ சாம்பியன்ஷிப் தொடரோ, எந்தவகைத் தொடராக இருந்தாலும் இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் நேருக்கு நேர் மோதிக் கொள்கின்றது என்றால், மைதானம் முழுவதும் ஆரவாரத்தில் குலுங்கும். மைதானங்கள் இப்படி இருந்தால் இந்த போட்டியை மையமாகக்கொண்டு நடைபெறும் வியாபரத்தின் விவரங்களைக் கேட்டால் நமக்கே தலைசுற்றும். மைதானத்திற்கு அருகில் உள்ள தங்கும் விடுதிகள் தொடங்கி போட்டி நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தொடங்கி இரண்டு நாட்களுக்குப் பின்னர் வரை போக்குவரத்து கட்டணங்கள் பண்டிகை நாட்களை விடவும் பல மடங்கு அதிகமாக விற்பனை செய்யப்படும். இது இல்லாமல், இந்தியா பாகிஸ்தான் போட்டியை டீவியில் நேரலையில் ஒளிபரப்பு செய்வதால் கிடைக்கும் வருமானமும் வரவேற்பும் மற்ற தொடர்களின் இறுதிப் போட்டிகளில் கூட கிடைக்காது.
போட்டி நடக்க வாய்ப்பில்லை
இப்படி மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் தீயாய் இருக்கும் கிரிக்கெட் ஆர்வமும் அதன் வருவாயும் இப்படி இருக்கும் போது, இந்தியாவும் பாகிஸ்தானும் மீண்டும் மோதிக் கொள்கின்றன. இந்த போட்டி வரும் சனிக்கிழமை அதாவது செப்டம்பர் மாதம் 2ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு துவங்கவுள்ளது. அட்டவணை இப்படி இருப்பதால், கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் ஒரு வீக் எண்ட் மாலையைக் கொண்டாட இதைவிட வேறு என்ன வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள். ஆனால், வீக் எண்டில் இந்தியா பாகிஸ்தான் மேட்ச் இருக்கு என தனது மற்ற கமிட்மெண்டுகளை ஒமிட் செய்த ரசிகர்கள் துவங்கி உற்சாகத்தில் இலங்கைக்கு இந்தியா மற்றும் பாகிஸ்தான் கொடிகளுடன் செல்ல திட்டமிட்டுள்ள ரசிகர்கள் வரை அனைவரின் மனதிலும் இடியாக ஒரு செய்தியை இறக்கியுள்ளது வெதர் ரிப்போர்ட்.
என்ன சொல்றாங்க வெதர் ரிப்போர்ட்டில்..
போட்டி நடக்கும் மைதானம் அமைந்துள்ள இலங்கையின் பல்லேகேலே பகுதியில் போட்டி நடக்கும் தினமான செப்டம்பர் 2ஆம் தேதி 90 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என இலங்கை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த செய்தியால் போட்டி நடைபெற வாய்ப்புகள் மிகமிகக் குறைவு என இப்போதே இலங்கை ஊடகங்களில் பேச்சுகள் துவங்கிவிட்டன. போட்டி தொடங்க தாமதமானால் ரசிகர்களுக்காகவாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடத்தப்படும் என கூறப்படுகிறது. ஆனால் அதற்கு வானிலை வழி விட்டால்தான் நடத்தமுடியும் எனவும் கூறப்படுவதால், இந்தியா பாகிஸ்தான் போட்டி நடைபெறுவது 90 சதவீதம் வாய்ப்பு இல்லை என்பது தான் தற்போதைய நிலவரமாக உள்ளது.
போட்டி நடக்கவில்லை என்றால்?
போட்டி நடக்கவில்லை என்றால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்குவதற்கு பேச்சு வார்த்தை நடத்தப்படலாம், இதனை இரண்டு அணிகளும் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் தனது முதல் போட்டியில் நேபாளம் அணியை வீழ்த்திய பாகிஸ்தான் அணி அடுத்த சுற்றான சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும். இந்தியா நேபாளத்தை வென்றால் தான் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலைக்கு தள்ளப்படும்.