ஆசிய கோப்பையில் சூப்பர் 4 கட்ட மூன்றாவது போட்டி இன்று நடைபெறுகிறது. இந்தியா - பாகிஸ்தான் இடையேயான இந்த போட்டியானது கொழும்பு ஆர்.கே. பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்கு முன், பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாமின் சிறப்பான சாதனை மிகச் சிறப்பாக உள்ளது. அது என்ன..? எதில் என்பதை இங்கு முழுமையாக பார்க்கலாம்...
இதுவரை பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக வெற்றிகரமான கேப்டன்களில் பாபர் அசாம் அதிக வெற்றி சதவீதம் பெற்று முதல் இடத்தில் உள்ளார். பாபர் அசாம் இதுவரை பாகிஸ்தான் அணிக்காக 123 போட்டிகளில் விளையாடி 74 வெற்றிகள் மற்றும் 37 தோல்வியுடன் உள்ளது. இதன்மூலம், பாகிஸ்தானின் கேப்டனாக பாபரின் வெற்றி சதவீதம் 60.16 ஆக உள்ள நிலையில் முதலிடத்தில் உள்ளார். முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் 58.20 வெற்றி சதவீதத்துடன் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் மொத்தம் 134 போட்டிகளில் தலைமை தாங்கி 78 வெற்றி மற்றும் 49 தோல்விகளை சந்தித்துள்ளது. இதற்குப் பிறகு, மிஸ்பா-உல்-ஹக் இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார். இவரது தலைமையில் 151 போட்டிகளில் பாகிஸ்தான் அணி களமிறங்கி 77 போட்டிகளில் வெற்றி மற்றும் 60 தோல்வியடைந்தது. கேப்டனாக மிஸ்பாவின் வெற்றி சதவீதம் 50.99. உலக கோப்பையை வென்ற கேப்டன் இம்ரான் கான் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளார். இம்ரான் கான் தலைமையில் பாகிஸ்தான் மொத்தம் 187 போட்டிகளில் விளையாடி 89ல் வெற்றி பெற்று 67ல் தோல்வியடைந்தது. இம்ரான் கான் தலைமையில் பாகிஸ்தானின் வெற்றி சதவீதம் 47.59 ஆக இருந்தது.
பாகிஸ்தானுக்கு கேப்டனாக அதிக வெற்றி சதவீதம்:
- பாபர் அசாம் - 60.16%
- வாசிம் அக்ரம் - 58.20%
- மிஸ்பா உல் ஹக்- 50.99%
- இம்ரான் கான்- 47.59%
இந்தியாவிற்கு எதிராக ஆசியக் கோப்பை 2023ல் பாகிஸ்தான்:
ஆசிய கோப்பையில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்த்து செப்டம்பர் 2 சனிக்கிழமை விளையாடியது. இந்தப் போட்டியில், பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் தாக்குதலுக்கு எதிராக இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாறினர். இந்திய அணியின் பலமே டாப் ஆர்டர்தான் அதுவே இங்கு ஆட்டம் கண்டது. பாகிஸ்தான் அணியின் வேகத்தினால் இந்திய அணியால் முழு ஓவரையும் கூட விளையாட முடியவில்லை. இந்தியா 48.5 ஓவரில் 266 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இப்போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் அனைவரும் பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர்களால் ஆட்டமிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் தரப்பில் ஷஹீன் அப்ரிடி 10 ஓவர்களில் 35 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது தவிர, நசீம் ஷா மற்றும் ஹரிஸ் ரவூப் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை எடுத்திருந்தனர்.
2022ல் நிலை:
2022 ஆசியக் கோப்பையின் சூப்பர்-4 கட்டத்தில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு எதிராக வெற்றியைப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட நிலையில் இன்றைய இந்தியா-பாகிஸ்தான் போட்டி மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.