ஆசியக்கோப்பை சிக்கல்:


ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்றால் அதில் பங்கேற்கமாட்டோம், என பிசிசிஐ அறிவித்துள்ளது. இதனால் இருநாட்டு முன்னாள் வீரர்களும் சமூக வலைதளங்களில் கடும் கருத்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வரிசையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஜாம்பவானான  ஜாவேத் மியான்தத், இந்திய அணியை கடுமையாக விமர்சித்துள்ளார்.


ஜாவேத் மியான்தத் கடும் விமர்சனம்:


இதுதொடர்பாக நேர்காணல் ஒன்றில் பேசிய அவர்,  ”நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன், பாகிஸ்தானிற்கு இந்தியா அணி வராவிட்டால், அவர்கள் நரகத்திற்கு வேண்டுமானால் போகட்டும். அதுபற்றி நாங்கள் கவலை கொள்ளப்போவதில்லை. நாங்கள் எங்களுக்கான கிரிக்கெட்டை பெறப்போகிறோம். இதுபோன்ற விஷயங்களைக் கட்டுப்படுத்துவது சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் வேலை, இல்லையெனில் ஆளும் குழுவை வைத்திருப்பதில் அர்த்தமில்லை. 


சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் அனைத்து நாடுகளுக்கும்  ஒரே மாதிரியன விதியை வைத்திருக்க வேண்டும். தொடரில் பங்கேற்க வரவில்லை என்றால், அவர்கள் எவ்வளவு பலமாக இருந்தாலும், அவர்களை நீக்க வேண்டும்.  பின் விளைவுகளுக்கு இந்திய அணி பயப்படுவதால் தான் பாகிஸ்தானிற்கு எதிராக அவர்கள் விளையாடுவதில்லை. எங்களது காலத்திலும் கூட பின் விளைவுகளுக்கு பயந்து இந்திய வீரர்கள் விளையாட மாட்டார்கள். பாகிஸ்தான் மட்டுமில்லை எந்தவொரு அணிக்கு எதிராக இந்திய அணி தோற்றாலும், அவர்களது ரசிகர்கள் வீடுகளை தீயிட்டு கொளுத்துவர். இதனால் தான் அவர்கள் விளையாட மறுக்கின்றனர்” என ஜாவேத் மியான்தத் காட்டமாக பேசியுள்ளார். இதையடுத்து, அவரை இந்திய அணி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.


ஆசியக்கோப்பை தொடர்:


6 அணிகள் பங்கேற்கும் 16 வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வருகின்ற செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் நடத்த ஐசிசி அனுமதி அளித்துள்ளது. ஆனால், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான அரசியல் உறவு கடந்த சில ஆண்டுகளாக சீராக இல்லை. இதன் காரணமாக இந்திய அணி பாகிஸ்தானில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை தொடரில் விளையாட முடியாது. எனவே, அதற்கு பதிலாக ஐக்கிய அரபு அமீரகம் போன்ற பொதுவான நாட்டில் நடத்தப்பட வேண்டும் என பிசிசிஐ செயலாளரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான ஜெய்ஷா அறிவித்தார். 


தொடரும் இழுபறி:


இதுதொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இருதினம் முன்பு பஹ்ரைனில் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுடன் ஒரு கூட்டத்தை கூட்டியது. ஆனால், அந்த கூட்டத்தில் இது குறித்த முடிவு எட்டப்படும் என்று எதிர்பார்க்க பட்ட நிலையில், இன்னும் முடிவடையவில்லை என்று தகவல்கள் கிடைத்துள்ளன. மீண்டும் இந்த கூட்டம் மார்ச் மாதம் கூடும் எனவும் அப்போதுதான் எங்கு நடக்கும் என்று அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆசியக் கோப்பை, 2023 உலகக் கோப்பை அல்லது 2025 சாம்பியன்ஸ் டிராபி ஆகிய தொடர்களில் பாகிஸ்தான் கலந்துகொள்ளுமா என்பது குறித்த பிசிபி முடிவுகளும், மார்ச் மாத கூட்டங்களில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு பின் தான் தீர்மானிக்க முடியும் என்று கூறப்படுகிறது.