ஒருநாள் தரவரிசையில் நம்பர் 1 அணியான ஆஸ்திரேலிய அணியை, தென்னாப்பிரிக்கா அணி 164 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசாத்திய வெற்றிபெற்றது. இந்த வெற்றியின்மூலம் தென்னாப்பிரிக்கா 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-2 என சமன் செய்துள்ளது. 


இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 416 ரன்கள் குவித்தது. பதிலுக்கு பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 252 ரன்களுக்குள் சுருண்டு, தோல்வியை சந்தித்தது. தற்போது தொடரின் கடைசி போட்டி செப்டம்பர் 17ம் தேதி நடக்கிறது. 


தென்னாப்பிரிக்கா அணியில் அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் ஹென்ரிச் கிளாசன் 83 பந்துகளில் 174 ரன்கள் குவித்து அசத்தினார். இவருக்கு அடுத்த படியாக, டேவிட் மில்லர் 45 பந்துகளில் 82 ரன்களும், வாண்டெர் டுசென் 65 பந்துகளில் 62 ரன்களும் எடுத்திருந்தனர். 


குவிக்கப்பட்ட சாதனைகளும்- வேதனைகளும்... 



  • தென்னாப்பிரிக்கா அணி நேற்றைய போட்டியில் 400 ரன்களை கடந்ததன் மூலம் ஒருநாள் போட்டிகளில் அதிகமுறை 400 ரன்களை கடந்த அணி சாதனையை படைத்துள்ளது. மேலும், இது ஒரு நாள் போட்டி வரலாற்றில் தென்னாப்பிரிக்காவின் ஐந்தாவது அதிகபட்ச ஸ்கோராகும். தென்னாப்பிரிக்கா அணி இதுவரை அதிகபட்சமாக 7 முறை 400 ரன்களை கடந்து அசத்தியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக இந்திய அணி 6 முறை 400 ரன்களை கடந்து இரண்டாவது இடத்தில் உள்ளது.

  • தென்னாப்பிரிக்கா அணிக்காக ஒருநாள் போட்டியில் ஒரு இன்னிங்களில் அதிக சிக்ஸர்கள் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை ஹென்ரிச் பெற்றார். நேற்றைய போட்டியில் கிளாசென் 13 சிக்ஸர்களை அடித்திருந்தார். இந்த பட்டியலில் தென்னாப்பிரிக்க அணியின் ஜாம்பவான்  ஏபி டி வில்லியர்ஸ் 16 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

  • ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நேற்றைய போட்டியில் ஐந்தாவது இடத்தில் பேட்டிங் செய்த கிளாசென் 174 ரன்களுடன் அதிக தனிநபர் பெற்ற இரண்டாவது வீரர் ஆனார். ஜிம்பாப்வேக்கு எதிராக இந்திய ஆல்ரவுண்ட் ஜாம்பவான் கபில்தேவ் 175 ரன்கள் எடுத்ததே ஐந்தாவது இடத்தில் பேட்டிங் செய்த பேட்ஸ்மேனின் அதிகபட்ச தனிநபர் ஸ்கோராகும். 

  • கிளாசென் மற்றும் மில்லர் இன்று 92 பந்துகளில் 222 ரன்கள் எடுத்தனர். கடைசி 15 ஓவர்களில் 222 ரன்கள் எடுத்த தென்னாப்பிரிக்கா கடைசி 9 ஓவர்களில் மட்டும் 164 ரன்கள் எடுத்தது. கடைசி 9 ஓவர்களில் முறையே ஒவ்வொரு ஓவருக்கு எடுக்கப்பட்ட ரன்கள் விவரம் பின்வருமாறு: 


42வது ஓவர் - 24 ரன்கள்.
43வது ஓவர் - 18 ரன்கள்.
44வது ஓவர் - 20 ரன்கள்.
45வது ஓவர் - 16 ரன்கள்.
46வது ஓவர் - 7 ரன்கள்.
47வது ஓவர் - 17 ரன்கள்.
48வது ஓவர் - 26 ரன்கள்.
49வது ஓவர் - 16 ரன்கள்.
50வது ஓவர் - 21 ரன்கள்.



  • கடைசி 9 ஓவர்களில் மட்டும் கிளாசென் மற்றும் மில்லர் ஜோடி 14 சிக்ஸர்கள் மற்றும் 11 பவுண்டரிகளை பறக்க விட்டு இருந்தனர். 

  • கடைசி 15 ஓவர்களில் 222 ரன்கள் எடுத்த தென்னாப்பிரிக்கா கடைசி 10 ஓவர்களில் மட்டும் 177 ரன்கள் எடுத்தது. இதில் மிக மோசமாக பாதிக்கப்பட்டது சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜாம்பா. இவர் 10 ஓவர் வீசி 113 ரன்கள் விட்டுக்கொடுத்துள்ளார். இதன்மூலம்,  ஒருநாள் போட்டியில் பந்துவீச்சாளர் ஒருவர் 10 ஓவர்கள் வீசி 113 ரன்களை விட்டுக் கொடுத்தது இது இரண்டாவது முறையாகும். ஜாம்பாவுக்கு முன்னதாக ஆஸி. பந்துவீச்சாளர் மைக் லூயிஸ் 2006 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவிக்கு எதிராக 10 ஓவர்களில் 113 ரன்களை விட்டுக்கொடுத்தார்.

  • 57 பந்துகளில் சதம் அடித்த கிளாசன், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மிகக் குறைந்த பந்துகளில் சதம் அடித்த இரண்டாவது பேட்ஸ்மேன் என்ற சாதனை படைத்தார். இதற்கு முன்னதாக இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி, 52 பந்துகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதம் அடித்தார்.

  • தென்னாப்பிரிக்காவுக்காக அதிவேகமாக சதம் அடித்த நான்காவது பேட்ஸ்மேன் கிளாசன் ஆவார். டி வில்லியர்ஸ் (31 பந்துகள்), மார்க் பவுச்சர் (44 பந்துகள்), டி வில்லியர்ஸ் (52 பந்துகள்) ஆகியோர் முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.