ஆசிய கோப்பை தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கும் இடையே தகராறு நீடித்து வருகிறது. இந்த விவகாரம் அடுத்த வாரம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிசிசிஐ மற்றும் பிசிபி இடையே அடுத்த வாரம் ஆசிய கோப்பையை நடத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட இருக்கிறது.
ஆசிய கோப்பை:
இந்த ஆண்டு நடைபெற உள்ள ஆசிய கோப்பையை நடத்தும் உரிமை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், பாதுகாப்பு பிரச்சனை காரணமாக பாகிஸ்தான் நாட்டிற்கு இந்திய அணியை அனுப்ப பிசிசிஐ மறுத்துவிட்டது. இதையடுத்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஹைப்ரிட் மாடலை அறிமுகப்படுத்தலாம் என தெரிவித்தது. இந்த மாடலின்படி, மற்ற அணிகள் தங்கள் போட்டிகளை பாகிஸ்தானில் மட்டுமே விளையாடும். அதே நேரத்தில் இந்திய அணியின் போட்டிகள் இலங்கை அல்லது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்தலாம் என்று தெரிவித்தது.
ஆனால், இதற்கு இலங்கை மற்றும் வங்கதேசம் நாடுகள் ஒப்பு கொள்ளவில்லை. இந்த இரு நாடுகளும் ஆசிய கோப்பை தொடரை ஒரு நடுநிலையான இடத்தில் மட்டுமே நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறது.
இதுகுறித்து இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்ததாவது, “ ஐபிஎல் பிளே ஆஃப் போட்டிகளை பார்க்க எங்களுக்கு அழைப்பு வந்துள்ளது. அங்கு நாங்கள் சென்றதும் ஆசிய கோப்பை பற்றி விவாதிப்போம். இதுகுறித்து இன்னும் எதுவும் முடிவு செய்யப்படவில்லை. ஆசிய கோப்பையை நடத்துவது குறித்து அடுத்த வாரம் முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.” என தெரிவித்தது.
ஒருநாள் உலகக்கோப்பை:
ஆசியக் கோப்பை குறித்த முடிவு எப்படி அமையுமோ..? அது பொறுத்தே இந்த ஆண்டு நடைபெற உள்ள உலகக் கோப்பையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆசிய கோப்பையை நடத்தும் உரிமையை பாகிஸ்தானிடம் இருந்து பறித்தால், உலக கோப்பையை புறக்கணிப்போம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தொடர்ந்து மிரட்டி வருகிறது. அக்டோபர்-நவம்பர் மாதங்களில் ஆசிய கோப்பைக்கு பிறகுதான் உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெற உள்ளது.