இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டிகள் என்றாலே இருநாட்டு ரசிகர்களிடையே விசில் பறக்கும். அதுவும் உலக கோப்பை தொடர், ஆசியக் கோப்பை தொடர் என்றால் பட்டிதொட்டி எங்கும் பட்டையை கிளப்பும். அந்தவகையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இந்தாண்டு மீண்டும் ஒருமுறை ஐசிசி தொடரில் விளையாட இருக்கின்றனர்.
இந்தியா அணியும், பாகிஸ்தான் அணியும் ஆசிய கோப்பை மற்றும் ஐசிசி போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகின்றன. இதனால் போட்டி குறித்து பெரும் பரபரப்பும், பில்டப்பும் நிலவி வரும் நிலையில், வரும் செப்டம்பர் மாதம் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஆசிய கோப்பை தொடரில் விளையாட இருக்கின்றனர்.
ஆசியக் கோப்பை 2023க்கான அட்டவணையில் ஒரே குழுவில் இந்தியாவும், பாகிஸ்தானும் இடம் பிடித்துள்ளன என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளருமான ஜெய் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், "2023 & 2024க்கான @ACCMedia1 பாதை அமைப்பு மற்றும் கிரிக்கெட் காலண்டர்களை வழங்குகிறோம்! இது இந்த விளையாட்டை புதிய உயரத்திற்கு கொண்டு செல்வதற்கான எங்களின் ஈடு இணையற்ற முயற்சிகள் மற்றும் ஆர்வத்தை உணர்த்துகிறது. நாடு முழுவதும் உள்ள கிரிக்கெட் வீரர்கள் கண்கவர் நிகழ்ச்சிகளுக்கு தயாராகி வருவதால், இது கிரிக்கெட்டுக்கு நல்ல நேரம் என்று உறுதியளிக்கிறது!” என பதிவிட்டு இருந்தார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசியக் கோப்பை தொடரில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் நேருக்குநேர் மோதின. அதில் இந்தியா தோல்வியடைந்தது. இதையடுத்து, இந்தாண்டு நடைபெறும் ஆசியக்கோப்பையில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி நிச்சயம் பழித்தீர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், 2023ம் ஆண்டுக்கான ஆசியக் கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடைபெறுகிறது.
முன்னதாக, கடந்த ஆண்டு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, ஆசியக் கோப்பை தொடரானது பாகிஸ்தான் நாட்டில் நடைபெற்றால் இந்திய அணி பங்கேற்காது என தெரிவித்தார். இதையடுத்து இந்த கருத்தானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணி புறக்கணிக்குமா அல்லது இந்த தொடரானது வேறு நாட்டிற்கு மாற்றப்படுமா என்ற கேள்வி எழுகிறது.
இந்தியா அணி கடைசியாக கடந்த 2008 ம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற்ற ஆசிய கோப்பையில் பங்கேற்றது. அதன்பிறகு மும்பை குண்டுவெடிப்பிற்கு பிறகு இந்திய அணி பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுபயணம் மேற்கொள்ளவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசியக் கோப்பை தொடரில் குரூப் 1 ல் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் தகுதிபெறும் அணி இடம்பெற்றுள்ளது. குரூப் 2 ல் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ளன.