ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று ஆஃப்கானிஸ்தான் -பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய ஆஃப்கானிஸ்தான் அணி பாகிஸ்தான் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆஃப்கானிஸ்தான் அணி 129 ரன்கள் மட்டுமே எடுத்தது. 130 என்ற எளிய இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. 


பாகிஸ்தான் அணி மோசமாக பேட்டிங் செய்தது. ஷதாப் கான் மட்டும் ஒரளவு தாக்குப்பிடித்து ஆடி 36 ரன்கள் எடுத்தார். இறுதியில் 19.2 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கடைசி ஓவரில் பாகிஸ்தான் அணி த்ரில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டிக்கு பிறகு மைதானத்திற்கு வந்து இருந்த ஆஃப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ரசிகர்களுக்கு இடையே சண்டை நடந்தது. 






இது தொடர்பான வீடியோவை பாகிஸ்தான் முன்னாள் வீரர் சொயிப் அக்தர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் பாகிஸ்தான் ரசிகர்கள் மற்றும் ஆஃப்கானிஸ்தான் ரசிகர்கள் தாக்கி கொள்ளும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. 


இந்த வீடியோவை பதிவிட்டு, “இதை தான் ஆஃப்கான் ரசிகர்கள் செய்து வருகின்றனர். இது போன்று பல முறை அவர்கள் செய்துள்ளனர். இது ஒரு போட்டி. இதை விளையாட்டு மணப்பான்மையுடன் விளையாட வேண்டும். ஆஃப்கானிஸ்தான் நாட்டு ரசிகர்கள் மற்றும் வீரர்கள் இதை உணர்ந்து கொள்ள வேண்டும். அப்போது தான் அவர்கள் கிரிக்கெட் விளையாட்டில் வளர முடியும்” எனப் பதிவிட்டுள்ளார். அவரின் இந்த வீடியோ வேகமாக வைரலாகி வருகிறது. அத்துடன் இது தொடர்பாக பலரும் தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். 


 




முன்னதாக இந்தப் போட்டியின் போது பாகிஸ்தான் பேட்டிங்கில் களத்தில் பாகிஸ்தான் வீரர் ஆசிஃப் அலிக்கும் ஆஃப்கானிஸ்தான் பந்துவீச்சாளர் ஒருவருக்கும் சண்டை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதற்கு ஆசிஃப் அலி பேட்டை காட்டி அடிக்கும் வகையில் சைகை காட்டினார். அந்தப் படமும் வேகமாக வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக ஆசிஃப் அலி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.