ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக அஸ்வின் விளையாடிவிட்டு நேராக இங்கிலாந்து சென்றுள்ளார். ஆனால் இந்திய நேரத்திற்கும், இங்கிலாந்து நேரத்திற்கும் பெரிய வித்தியாசம் இருக்கும் என்பதால், தூக்கம் தொடர்பான பிரச்னைகளை கையாண்டுவிட்டால் வெற்றியின் முதல் படியை கடக்கலாம் என்று கருதுவதாக அஷ்வினுடன் பணிபுரியும் தரவு ஆய்வாளர் பிரசன்னா அகோரம் தெரிவிக்கிறார்.


WTC க்கான அஸ்வினின் தயாரிப்புகள்


ஜெட் லாக் (jet lag) என்ற விஷயம் பொதுவாக ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாடுகளுக்கு செல்பவர்களுக்கு ஏற்படும் விஷயம். இங்கிருப்பதற்கும், அங்கும் நேரத்தில் சில மாறுபாடுகள் ஏற்படுவதால் தூங்கும் நேரத்தை மூளை குழப்பிக்கொள்ளும். அதனால் தூக்கம் இல்லாமலும், வேலை நேரத்தில் தூக்கம் வரும் பிரச்சனைகளும் ஓரிரு வாரங்களுக்கு தொடரும். இந்திய அணி வீரர்கள் இங்கிலாந்து சென்று ஒரே வாரத்தில் போட்டிகள் தொடங்குவதால் அதனை முதலில் சரி செய்ய வேண்டும் என்பதில் அஸ்வின் முன்பிலிருந்தே உறுதியாக இருந்துள்ளார். ஏனென்றால் அவர் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்ற போது, கிட்டத்தட்ட நடுப்பகுதியிலேயே, தன் தூக்க சுழற்சியை இங்கிலாந்து நேரத்திற்கு ஏற்றார்போல் மாற்றி இருக்கிறார்.



தூக்க சுழற்சிக்கான பயிற்சி


இங்கிலாந்தில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான தயாரிப்பைக் கருத்தில் கொண்டு மே மாதத்தின் நடுப்பகுதியில் இருந்து, அஸ்வின் தனது தூக்க சுழற்சியை லண்டன் நேரத்தோடு சீரமைக்க விரும்பியுள்ளார். "ஏற்கனவே, ஒயிட் பந்தில் இருந்து சிவப்பு பந்துக்கு மாற கொஞ்சம் நேரம் எடுக்கும், அதோடு தூக்க சுழற்சியும் பிரச்சனை செய்தால் முழு ஆட்டத்தை வெளிப்படுத்துவது கடினம். எனவே கொஞ்ச நாட்கள் கடைபிடித்தாலே எல்லாம் பழக்கம்தான் என்பதால், ராஜஸ்தான் அணி போட்டி இல்லாத நாட்களில் எல்லாம் அஸ்வின் சீக்கிரம் தூங்க சென்று விடுவார். இதன் மூலம் இங்கிலாந்து நேரத்திற்கு ஏற்ப மனதை பழக்குவதில் கடந்த சில வாரங்களாகவே செயல்பட்டு வருகிறார் அஷ்வின்," என்று அஷ்வினுடன் பணிபுரியும் தரவு ஆய்வாளர் பிரசன்னா அகோரம் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தார்.


தொடர்புடைய செய்திகள்: Google Search : கூகுளில் இதையெல்லாமா தேடுவாங்க...2004 முதல் அதிகம் தேடப்பட்டவை என்ன...? வெளியான அதிர்ச்சி தகவல்...!


அஸ்வினின் ஆய்வுகள்


தூக்கம் இதில் ஒரு சிறிய மாற்றம்தான். ஓவலில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடக்கவுள்ள ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்பட தேவையான மற்ற முக்கிய மாற்றங்களையும் அவர் சிந்தனையுடன் செய்து வருகிறார் என்று அவர் கூறுகிறார். குறிப்பாக அக்சர் பட்டேல் உள்ளிட்ட வீரர்கள் ஐபிஎல் தொடரின் போதே டி பந்தில் பயிற்சி மேற்கொண்டதாக தகவல்கள் வந்தன. அதே போல அஸ்வினின் எண்ணங்களும் டெஸ்ட் போட்டி குறித்தே இருந்ததாக பிரசன்னா பதிலளித்தார். குறிப்பாக அஸ்வின், இந்த சீசனிலும் கடந்த காலத்திலும் ஓவலில் எந்த அளவு திருப்பம் ஏற்பட்டது? அது திரும்பாத நாட்களில் வேறு வழி என்ன? இந்த சீசனில் கவுண்டி கிரிக்கெட்டில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக மார்னஸ் லாபுசாக்னே மற்றும் ஸ்டீவ் ஸ்மித் பயன்படுத்திய ஷாட்கள் என்ன? உஸ்மான் கவாஜா கடந்த காலத்தில் இங்கிலாந்தில் சுழற்பந்து வீச்சை எவ்வாறு கையாண்டார்? என்பது குறித்தெல்லாம் ஆராய்ந்து தெரிந்து வைத்துள்ளார் என்றார்.



பந்து திரும்பும் அளவு


“அவர் இந்த சீசனிலும் கடந்த சில வருடங்களிலும் ஓவல் மைதானத்தில் எந்த அளவு பந்து திரும்புகிறது என்னும் அளவைக் கேட்டுக்கொள்கிறார், ஏனென்றால் பேட்ஸ்மேன்களிடமிருந்து என்ன வகையான ஷாட்களை எதிர்பார்க்கலாம் என்பதற்கான குறிப்பை அவர் அதன்மூலம் பெறுகிறார். ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்யும் நிலையில், அதிக திருப்பம் இல்லை என்றால், அவர்கள் நிச்சயமாக இறங்கி வந்து ஆடுவார்கள். ஸ்மித் போன்ற ஒரு வீரர், இறங்கி வந்து மிட்-விக்கெட் அல்லது கவர்ஸ் திசையில் ஃபிளிக் செய்ய தயங்கமாட்டார். எனவே, டர்ன் அளவு குறைவு என்று தெரிந்தால், நீங்கள் சில வகையான பந்துகளை தவிர்த்து, அதற்கேற்ப ஃபீல்டுகளை அமைக்கலாம்," என்று பிரசன்னா வெளிப்படுத்துகிறார்.


அஸ்வினின் சிறப்பான சராசரி


அஸ்வினின் விரிவான ஆராய்ச்சி மூலம், இங்கிலாந்தில் கடந்த காலத்தில் நாதன் லியான் என்ன செய்தார் என்பதை பகுப்பாய்வு செய்துள்ளார். லியானுடன் ஒப்பிடும்போது, கடந்த சில ஆண்டுகளாக அஷ்வின் எல்லா அம்சத்திலும் அவரைத் தாண்டியுள்ளார். லியான் மட்டுமல்ல, அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங், ரங்கனா ஹெராத் ஆகியோரை விட அஷ்வினின் சராசரி குறைவாக உள்ளது. இங்கிலாந்தில் அஸ்வினை விட சிறந்த சராசரியை, முத்தையா முரளிதரன் (19.20), ஷேன் வார்ன் (21.94) மட்டுமே வைத்துள்ளனர்.