ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023 இன் இறுதிப் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. ஜூன் 7 (இன்று) முதல் ஜூன் 11 வரை லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் இறுதிப்போட்டி நடைபெறுகிறது. இந்த இறுதிப்போட்டிக்கு தகுதி பெற, WTC 2021-23 டெஸ்ட் போட்டிகள் சுழற்சியில், இந்தியா இரண்டாவது இடத்தையும், ஆஸ்திரேலியா முதல் இடத்தையும் பிடித்தது. முதல் முறை நடைபெற்ற 2021 WTC இல் இறுதிப்போட்டி சென்ற இந்தியாவுக்கு தொடர்ந்து இரண்டாவது முறையும் வாய்ப்பு கிடைத்துள்ளது. கடந்த முறை சவுத்தாம்ப்டனில் நடந்த 2021 WTC இறுதிப் போட்டியில், கேன் வில்லியம்சனின் நியூசிலாந்திற்கு எதிராக இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அதிர்ச்சிகரமான தோல்வியை சந்தித்தது. கடந்த முறை போல் இல்லாமல், இந்த ஆண்டு, இந்திய அணி எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


WTC 2023 இறுதிப்போட்டி


ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் இந்தியா, இந்த ஆண்டு இந்தியாவில் நடந்த பார்டர்-கவாஸ்கர் டிராபியில் ஆஸ்திரேலியாவை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி இந்த ஆண்டு இறுதிப் போட்டிக்கு வருகிறது. அந்தத் தொடரிலும் முன்பு எதிர்பார்த்தது போலவே இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா ஜோடி ஆஸி.யை கதறவிட்டது. இறுதிப் போட்டியிலும் அவர்கள் பெரும் பங்கு வகிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் இங்கிலாந்தின் நிலையற்ற வானிலை மற்றும் மேகமூட்டமான சூழ்நிலையை மனதில் கொண்டு இருவரில் ஒருவரை மட்டும் களமிறக்குவது பற்றி பேச்சுக்கள் உள்ளன. தற்போது வந்துள்ள செய்தி வரை பிட்ச் பவுன்சிற்கு சாதகமாக இருக்கும் என்பதால், அதிக வேகப்பந்து வீச்சாளர்கள் உடன் இறங்குவது சாமர்த்தியமாக இருக்கும்.



அஸ்வின் - ஜடேஜா


ஆனால் அஸ்வின் - ஜடேஜா இருவருமே பயங்கரமான ஃபார்மில் இருப்பதால் யாரை வெளியில் வைப்பது என்பதை முடிவெடுத்தல் கடினமாக இருக்கும். ஜடேஜா உலகின் நம்பர் 1 டெஸ்ட் ஆல்ரவுண்டராக இருக்கும் அதே வேளையில், ஐபிஎல் 2023ல் சென்னை சூப்பர் கிங்ஸின் பட்டத்தை வென்றதில் பெரும் பங்கு வகித்த பிறகு இந்தப் போட்டிக்கு வருகிறார். அஸ்வின் டெஸ்ட் பந்துவீச்சாளர் தரவரிசையில் நம்பர் 1 இடத்தில் அமர்ந்துள்ளார், அதோடு ஆல்ரவுண்டர் தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ளார். அஷ்வின் மற்றும் ஜடேஜாவின் நன்மை என்னவென்றால், அவர்களின் பந்துவீச்சைத் தவிர, அவர்கள் நல்ல பேட்டர்கள். அணிக்கு தேவைப்படும் நேரங்களில் எல்லாம் நல்ல பங்களிப்பை தந்துள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்: Rohit Sharma: ஓய்வு எப்போது என அதிரடியாக அறிவித்த ரோகித் சர்மா.. இந்தியாவின் அடுத்த கேப்டன் யார்?


கீப்பர் யார்?


இன்றைய போட்டியில் இந்தியாவின் ப்ளேயிங் லெவனைப் பற்றி யூகித்தால், இந்திய அணியின் டாப்-5 கிட்டத்தட்ட நிலைபெற்றுவிட்டது. கேப்டன் ரோஹித் உடன் ஷுப்மான் கில் இன்னிங்ஸை தொடங்கலாம். அதன் பிறகு டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் சேதேஷ்வர் புஜாரா 3-வது இடத்திலும், விராட் கோலி தனது வழக்கமான நம்பர் 4-லும், முன்னாள் டெஸ்ட் துணை கேப்டன் அஜிங்க்யா ரஹானே 5-வது இடத்திலும் இருப்பார்கள். இனிதான் பிரச்சனை ஆரம்பம் ஆகிறது. ரிஷப் பண்ட் காயத்திற்கு பின் ஒரு நல்ல விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் அந்த இடத்தை நிரப்ப வேண்டிய கட்டாயம் இருந்தது. இப்போதைக்கு இன்னும் டெஸ்ட் அறிமுகம் செய்யாத இஷான் கிஷன் மற்றும் 2023 BGTயின் நான்கு டெஸ்ட்களிலும் விளையாடிய கே.எஸ். பரத் ஆகிய இரண்டு ஆப்ஷன்கள் உள்ளன, மேலும் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும். ஏனெனில் கேஎஸ் பாரத் கீப்பிங் நன்றாக செய்தாலும், பேட்டிங்கில் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. இஷன் கிஷன் என்றால், அறிமுக வீரரை கொண்டு செல்லும் அளவுக்கு ரிஸ்க் எடுக்குமா அணி நிர்வாகம் என்பது சந்தேகம்தான்.



பந்து வீச்சு அட்டாக் எப்படி?


பந்து வீச்சு அட்டாக்கை பொருத்தவரை, ஷமி மற்றும் சிராஜ் முதன்மை பந்து வீச்சாளர்கள் என்பது உறுதி. ஒரு வேளை அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவருமே இறுதிப் போட்டியில் இடம்பிடித்தால், உமேஷ் யாதவ் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோரில் ஒருவர் மட்டுமே மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக இருக்க முடியும். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான WTC 2023 இறுதிப் போட்டியில் இந்தியாவின் உத்தேச அணி: ரோஹித் ஷர்மா (C), சுப்மான் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே, ரவீந்திர ஜடேஜா, இஷான் கிஷன் (WK), ரவிச்சந்திரன் அஷ்வின், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, முகமது சிராஜ்.