அஜிங்க்யா ரஹானே கிட்டத்தட்ட 18 மாதங்களுக்குப் பின்னர் இந்தியாவுக்காக டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளார்.  ஜூன் 7-ஆம் தேதி ஓவல் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணிக்காக களமிறங்கவுள்ளார். ஐபிஎல் தொடர் மற்றும் அதற்கு முன்னர் நடைபெற்ற இந்திய அளவில் நடைபெற்ற ரஞ்சி கோப்பை போட்டிகளில் சிறப்பாக விளையாடியதன் மூலம் இந்திய டெஸ்ட் அணிக்கு திரும்பியுள்ளார். 


தென்னாப்பிரிக்காவில் தொடரை இழந்த பிறகு ரஹானே மற்றும் சேட்டேஷ்வர் புஜாரா இருவரையும் டெஸ்ட் அணியில் இருந்து  2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்திய அணி நீக்கியது. அதன் பின்னர் நடைபெற்ற போட்டிகளில் ரஹானே அணியில் சேர்க்கப்படவில்லை, ஆனால் புஜாரா உடனடியாக உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடியதால் மீண்டும் அணிக்கு திரும்பினார். 


 ரஹானேவைப் பொறுத்தவரையில் நியூசிலாந்து, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் சதங்களைக் குவித்ததன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாட முடியும் என்ற நம்பிக்கை அவருக்கு இயல்பாகவே இருக்கும். அதிலும் குறிப்பாக இம்முறை அவர் கேப்டனாக விளையாடாமல். பேட்ஸ்மேனாக களமிறங்குவதால் அவரால் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.  


இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமைத் தேர்வாளர் MSK பிரசாத், மிகுந்த எதிர்பார்ப்பு  கொண்ட WTC இறுதிப் போட்டியில் சிறப்பாகச் செயல்பட்டால், ரஹானேவால் தொடர்ந்து இந்திய அணியில் நீடிக்க முடியும்.  


மேலும் அவர் "முதலில் அஜிங்க்யா ரஹானே வெளிநாட்டில் நடந்த தொடர்களில் சிறப்பாக விளையாடியுள்ளார். அவர் கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் ரன்களை எடுத்துள்ளார். ஓரிரு தொடரில்  சிறப்பாகச் செயல்படமுடியாமல் போனதால் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார், ஆனால் கடந்த 18 மாதங்களில் அவர் உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிகம் விளையாடி நிறைய ரன்கள் எடுத்துள்ளார்." இவ்வாறு அவர் கூறியுள்ளார். 


மொத்தம் 82 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரஹானே, இதில் 140 இன்னிங்ஸில் பேட்டிங் செய்துள்ளார். இதில் 12 சதங்களும் 25 அரைசதங்களும் விளாசியுள்ளார். இரட்டைச் சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட ரஹானே 188 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்ததால், டெஸ்ட் போட்டியில் இவரது அதிகபட்ச ஸ்கோராக அதுதான் உள்ளது. இதுவரை  நான்கு ஆயிரத்து 931 ரன்கள் சேர்த்துள்ள இவர், இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் சிறப்பாக விளையாடி 5 ஆயிரம் ரன்களைக் கடந்தவர்கள் பட்டியலில் இணைவார் எனவும் எதிர்பார்க்கபடுகிறது. இதுவரை 560 பவுண்டரி மற்றும் 34 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். அதேபோல் ஃபீல்டிங்கிலும் சிறப்பாக செயல்படும் ரஹானே இதுவரை 99 கேட்சுகள் பிடித்துள்ளார். ஆஸ்திஎரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் முடிவிற்குள் கேட்சுகளின் எண்ணிக்கையை 100 அல்லது அதற்கு மேல் மாற்றிவிடுவார். அதேபோல் இதுவரை இரண்டு ரன் அவுட் செய்துள்ளார்.