உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நாளை அதாவது ஜூன் 7 இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுவதற்கான இந்த மோதலில் இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன.


இந்திய அணியை பொறுத்தவரையில் இந்திய அணியின் பேட்டிங்கில் மிகப்பெரிய நம்பிக்கை முன்னாள் கேப்டன் விராட்கோலியும், கேப்டன் ரோகித்சர்மாவுமே. புஜாரா, ரஹானே ஆகிய அனுபவ வீரர்களுடன் சுப்மன்கில் இருந்தாலும் ரோகித்சர்மா – விராட்கோலி இருவரும் ஆட்டத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர்கள் ஆவார்கள். மேலும், ஐ.சி.சி. சாம்பியன் கோப்பைகளுக்கான இறுதி ஆட்டங்களில் ஆடிய அனுபவம் நிரம்பியவர்கள். அதேபோல் பந்து வீச்சில் இந்திய அணியில் முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர் என அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் இந்திய அணிக்காக விக்கெட் கீப்பராக களமிறங்குவது யாராக இருக்கும் என்ற கேள்வி பலருக்கு இருந்து வருகிறது.


அதேபோல், சிலர் இஷான் கிஷனுக்கும் சிலர் கே.எஸ் பரத்துக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என கருத்துகளைக் கூறிவர, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தனது விக்கெட் கீப்பர் பணியின் போது மின்னல் வேகத்தில் விக்கெட்டுகளை வீழ்த்துபவருமான மகேந்திர சிங் தோனி, இந்திய அணியில் உள்ள கே.எஸ் பரத்துக்கு உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான தனது அறிவுரையை வழங்கியுள்ளது குறித்து கே.எஸ் பரத் ஐசிசி நடத்திய நிகழ்வில் பேசியுள்ளார்.  


இதுகுறித்து பேசியுள்ள கே.எஸ் பரத், ஐபிஎல் தொடரின் போது தோனியிடம் பேசினேன். அப்போது  அவர், இங்கிலாந்தில் கீப்பிங் செய்ய மிகவும் சௌகரியமாக இருக்கும். கிரிக்கெட்டில் கீப்பிங் பணி என்பது யாராலும் பாராட்டப்படாத பணி. ஆனால் 90 ஓவர்களில் ஒவ்வொரு பந்தின் போதும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என தோனி கூறியதாக கே.எஸ் பரத் கூறினார். 


இந்திய அணியைப் பொறுத்தவரையில் விக்கெட் கீப்பராக யார் களமிறங்குவார் என்பது குறித்து இன்னும் முழுமையாக முடிவு செய்யப்படவில்லை. அதேபோல், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் தொடரில் ரிஷப் பண்ட்ற்கு பதிலாக 4 டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடியுள்ளார். ஆனால் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் 6 இன்னிங்ஸில் வெறும் 44 ரன்கள் மட்டும் தான் எடுத்துள்ளார். அதேபோல், ரஞ்சிக் கோப்பையில் அதிகம் விளையாடிய அனுபவம் உள்ள வீரர் என்பதால் ரோகித் சர்மா இவரை அணியில் சேர்க்க வாய்ப்புள்ளது. மேலும், இஷான் கிஷன் பேட்டிங்கில் சிறப்பாக ஆடக்கூடியவர் என்றாலும், இந்திய அணி தனது ப்ளேயிங் லெவனை சற்று யோசித்து தான் முடிவு செய்யும் எனலாம்.