முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வினின் சுழலில் மூன்றாவது நாளிலேயே வீழ்ந்தது மேற்கிந்திய தீவுகள் அணி.


மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம்:


உலக சாம்பியன்ஷிப் கிரிக்கெட் இறுதிப் போட்டியின் தோல்விக்குப் பிறகு இந்திய அணி மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 12ம் தேதி தொடங்கிய முதல் டெஸ்ட்டில் டாஸில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோரது சுழலை எதிர்கொள்ள முடியாமல், அந்த அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதனால் அந்த அணி 150 ரன்னுக்கே ஆல்-அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக அஸ்வின் 5 விக்கெட்டுகளும், ஜடேஜா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.


அஷ்வின் அபார பந்துவீச்சு:


இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி வீரர்களான ஜெய்ஸ்வால் 171 ரன்கள், ரோகித் ஷர்மா 103 ரன்கள், விராட் கோலி 76 ரன்கள் விளாசினர். 5 விக்கெட் இழப்பிற்கு 421 ரன்கள் எடுத்து இந்தியா டிக்ளேர் செய்தது. 271 ரன்கள் பின் தங்கிய நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினின் சுழலில் தாக்குப்பிடிக்க முடியாத மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை பறிகொடுக்க  அந்த அணி 130 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய அஷ்வின்,  இரண்டாது இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை எடுத்து மொத்தமாக 12 விக்கெட்டுகளை சாய்த்தார். இதன் மூலம் அஷ்வின் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார்.  


அஷ்வின் படைத்த சாதனைகள்



  • சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய ஆஃப் ஸ்பின்னர்கள் பட்டியலில் 707 விக்கெட்டுகள் வீழ்த்திய ஹர்பஜன் சிங்கின் சாதனையை 709 விக்கெட்டுகள் வீழ்த்தி முறியடித்துள்ளார் அஸ்வின்.

  • ஒரு போட்டியில் எட்டாவது முறையாக 10 விக்கெட்டுகளுக்கும் மேல் வீழ்த்தியுள்ளார் அஸ்வின். இதன் மூலம் இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் அனில் கும்ப்ளேவின் சாதனையை சமன் செய்துள்ளார் 

  • அதிகமுறை 5-விக்கெட்ஸ்களை வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் அஷ்வின் (34) இரண்டாவது இடத்தை எட்டியுள்ளார். இந்த பட்டியலில் கும்ப்ளே (35) முதல் இடத்தில் நீடிக்கிறார்.

  • கடந்த 17 ஆண்டுகளில் ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 12 விக்கெட்டுகளுக்கும் மேல் வீழ்த்திய இந்திய அணி பந்துவீச்சாளர்களில் அஸ்வின் மட்டுமே 6 முறை 12 விக்கெட்டுகளுக்கும் மேல் வீழ்த்தி இடம்பெற்றிருக்கிறார். வேறு யாரும் 12 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தவில்லை. இந்த சாதனையை செய்ய இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனுக்கு 133 போட்டிகள் தேவைப்பட்டது ஆனால் அதனை 93 டெஸ்ட் போட்டிகளிலேயே செய்துள்ளார் அஸ்வின் என்பது குறீப்பிடத்தக்கது.

  • இரண்டு இன்னிங்ஸிலும் 5 விக்கெட்டுகளுக்கும் மேல் வீழ்த்திய இந்திய பவுலர்கள் பட்டியலில் 6 முறை இந்த சாதனையை செய்து அஸ்வின் முதலிடத்திலும், 3 முறை செய்து ஹர்பஜன் இரண்டாவது இடத்திலும், 2 முறை செய்து இர்ஃபான் பதான் 2வது இடத்திலும் உள்ளனர்.

  • வெற்றி பெற்ற போட்டியில் அதிகமுறை 5-விக்கெட்ஸ் வீழ்திய வீரர்களின் பட்டியலில், ஷேன் வார்ன் சாதனையை முறியடித்து அஷ்வின் (28) இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 



வெளிநாடுகளில் விளையாடிய டெஸ்ட் தொடர்களில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக மட்டும் பத்து வெற்றிகளை பதிவு செய்துள்ளது இந்திய அணி. அதோடு  ஒரு இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதே அதிகபட்சமாகும். கடந்த 2016ம் ஆண்டு ஆண்டிகுவாவில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில்  இன்னிங்ஸ் மற்றும் 92 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதே அதிகபட்சமாக இருந்தது.


இந்த தொடரில் அஸ்வின் சிறப்பாக பந்துவீசி 12 விக்கெட்டுகள் வீழ்த்திய நிலையில், சமீபத்தில் நடைபெற்று முடிந்த உலகக்கோப்பை டெஸ்ட் இறுதிப்போட்டியில் அணியில் இருந்தும், பிளேயிங் லெவனின் அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.