இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் என்ற பெயர்களை குறிப்பிட்டால் அனைவரும் ஜாகீர் கான், அஜித் அகர்கர், ஜவகல் ஸ்ரீநாத், பும்ரா, முகமது ஷமி என்ற ஒரு சிலரையே குறிப்பிடுவோம். ஆனால், இவர்களில் முக்கியமானவரும் தனித்துவமானவருமான ஆஷிஷ் நெஹ்ராவின் பெயரை மறந்துவிடும். 


நெஹ்ராவின் கேரியர் பெரும்பாலும் காயத்தால் பாதிக்கப்பட்டதால் அவரால் தொடர்ந்து இந்திய அணிக்காக விளையாட முடியாமல் போனது. இவை அனைத்தையும் மீறி, நெஹ்ரா தனது வாழ்க்கையில் இந்திய அணிக்கான பல வெற்றிகளை தேடி தந்துள்ளார். 


2003 உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆஷிஷ் நெஹ்ராவின் அசாத்திய பந்துவீச்சு எந்தவொரு இந்திய ரசிகர்களாலும் அவ்வளவு எளிதாக மறக்க முடியாது. அப்படிப்பட்ட திறமை வாய்ந்த நெஹ்ரா இன்று தனது 44வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். 






இந்தியாவுக்காக அறிமுகம்:


1997-98 இல் உள்நாட்டு கிரிக்கெட்டில் தனது வாழ்க்கையைத் தொடங்கிய நெஹ்ரா, 1999 இல் முதல் முறையாக இந்திய நாட்டுக்காக களமிறங்கினார். இலங்கைக்கு எதிராக நெஹ்ரா நாக்பூரில் தனது முதல் டெஸ்ட் மற்றும் 2001-ல் ஜிம்பாப்வேக்கு எதிராக தனது முதல் ஒருநாள் போட்டியில் விளையாடினார். 


ஆஷிஷ் நெஹ்ரா இந்தியாவுக்காக இதுவரை மொத்தம் 164 சர்வதேச போட்டிகளில் விளையாடி 235 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதுவரை அவர் 17 டெஸ்டில் 44 விக்கெட்டுகளையும், 120 ஒருநாள் போட்டிகளில் 157 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். மேலும், நெஹ்ரா 27 டி20 போட்டிகளில் 34 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இரண்டு உலகக் கோப்பைகள் மற்றும் மூன்று சாம்பியன்ஸ் டிராபிகளில் இந்திய அணியின் ஒரு அங்கமாக இருந்தார். இது தவிர, இரண்டு ஆசிய கோப்பைகளிலும் இந்திய அணியில் இடம்பிடித்திருந்தார். தற்போது நடப்பு ஐபிஎல் சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஆஷிஷ் நெஹ்ரா இருந்து வருகிறார்.





 


சிறந்த பந்துவீச்சு: 



  • 2003 உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக நெஹ்ரா அற்புதமாக பந்துவீசி அசத்தினார். அந்த போட்டியில் அவர், வெறும் 23 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம், இந்திய அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றிபெற்றது.

  • 2003 உலகக் கோப்பையில் இலங்கைக்கு எதிராக 35 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஆஷிஷ் நெஹ்ரா. இந்தப் போட்டியில் இந்திய அணி 183 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

  • 2005ல் நடந்த இந்தியன் ஆயில் கோப்பையின் இறுதிப் போட்டியில், இலங்கை அணிக்கு எதிராக 59 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஆஷிஷ் நெஹ்ரா.

  • 2010 ஆம் ஆண்டில், ஆஷிஷ் நெஹ்ரா இலங்கைக்கு எதிராக 40 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அற்புதமான மறுபிரவேசம் செய்தார். அவரது சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி ஆசிய கோப்பையை வென்றது.

  • இந்தியா, இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு தொடரின் ஆட்டத்தில், நியூசிலாந்துக்கு எதிராக ஆஷிஷ் நெஹ்ரா 47 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார். இவரது சிறப்பான பந்துவீச்சால் நியூசிலாந்து அணி 288 ரன்களுக்கு சுருண்டது. இருப்பினும், இந்திய அணி இலக்கை துரத்தும்போது தோல்வியை சந்தித்தது.