Ashes Series 2023: ஆஷஸ் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியிலும் இங்கிலாந்து அணியை ஆஸ்திரேலிய அணி வென்று, தொடரில் முன்னிலை வகிக்கிறது. மொத்தம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணி முதல் இரண்டு போட்டிகளிலும், வென்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரில் தனது வெற்றிக்கணக்கை துவங்கிய நிலையில், கடந்த ஜூன் 28ஆம் தேதி இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது.
முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 416 ரன்கள் எடுத்தது. அதன் பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி 325 ரன்கள் சேர்த்தது. இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 279 ரன்களுக்கு ஆல் ஆவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 371 ரன்கள் நிர்ணயம் செய்யப்பட்டது. அதன் பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி தொடக்கத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் 50 ரன்களுக்குள் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்தது. அவ்வளவு தான் இந்த போட்டியிலும் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று விடும் என அனைவரும் கூறத் தொடங்கி விட்டனர். ஆனால் அதன் பின்னர் பொறுப்புடன் ஆடிய பென் டக்கெட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் இருவரும் இங்கிலாந்து அணியை மீட்க ஆரம்பித்தனர்.
சிறப்பாக ஆடி வந்த பென் டக்கெட் 83 ரன்னில் தனது விக்கெட்டை இழக்க, அதன் பின்னர் வந்த பேரிஸ்டோவ் தனது விக்கெட்டை இழந்தார். அதுவரை மிகவும் பொறுமையாக ஆடி வந்த ஸ்டோக்ஸ் அதன் பின்னர் ருத்ரதாண்டவ ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். அதாவது, தான் எதிர்கொண்ட முதல் 126 பந்துகளில் 62 ரன்கள் சேர்த்திருந்த ஸ்டோக்ஸ், அடுத்த 21 பந்தில் 46 ரன்கள் குவித்தார். அதில் ஹாட்ரிக் சிக்ஸர்களும் அடங்கும்.
அதன் பின்னரும் பொறுப்புடன் ஆடி அணிக்கு நம்பிக்கையாக விளங்கிய பென் ஸ்டோக்ஸ் 155 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுக்க, இங்கிலாந்து அணியின் நம்பிக்கை உடைந்தது. ஸ்டோக்ஸின் விக்கெட்டுக்குப் பின்னர் இங்கிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தோல்வித் தழுவியது. இரண்டாவது இன்னிங்ஸின் இறுதியில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 327 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், 43 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. ஏற்கனவே முடிந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றிருந்தது. இதனால் 5 போட்டிகள் கொண்ட தொடரை ஆஸ்திரேலியா அணி 2-0 என்ற கணக்கில் வென்று முன்னிலை வகிக்கிறது.
இந்த வெற்றியின் மூலம் கேப்டனாக தான் எதிர்கொண்ட ஆஷஸ் தொடரின் 6 போட்டிகளில் 5இல் வெற்றியும், ஒரு போட்டியில் டிராவும் சந்தித்துள்ளார். இதனால் ஆஷஸ் தொடரில் இதுவரை தோல்வியைச் சந்திக்காத கேப்டனாக உருவெடுத்துள்ளார் பேட் கம்மின்ஸ்.