மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த முன்னாள் விரர் கிறிஸ் கெயில், சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்திற்கு, வைத்துள்ள கோரிக்கை ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டி:


உலகக்கோப்பைக்கான தகுதிச் சுற்றில் விளையாடிய இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி,  மற்ற கத்துக்குட்டி அணிகளை எளிதில் வீழ்த்தி உலக்கோப்பையில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 10 அணிகள் களமிறங்கிய லீக் போட்டியில், இரண்டு போட்டிகளில் மட்டுமே வென்று, அதிருஷ்டவசமாக மேற்கிந்திய தீவுகள் அணி சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறியது. ஆனால் சூப்பர் சிக்ஸ் சுற்றில் கட்டாய வெற்றியில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக விளையாடியது.


சொதப்பிய மேற்கிந்திய தீவுகள் அணி:


முதலில் பேட்டிங் செய்த அணி வெஸ்ட் இண்டீஸ் 50 ஓவர்கள் கூட தாக்குப்பிடிக்க முடியாமல், 43.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 181 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதன் பின்னர், களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி 43.3 ஓவரில் மூன்று விக்கெட்டுகளை இழந்து, 185 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால், ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் விளையாடும் வாய்ப்பை வரலாற்றில் முதன்முறையாக மேற்கிந்திய தீவுகள் அணி தவறவிட்டது. இது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.






ஐசிசி வெளியிட்ட வீடியோ:


இதனிடையே, மேற்கிந்திய தீவுகள் அணி தோல்வியுற்றபோது அந்த மைதானத்தில் குவிந்து இருந்த  ரசிகர்கள் சோகமடைந்தது மற்றும் வீரர்கள் மனமுடைந்து அமர்ந்து இருப்பது உள்ளிட்ட உணர்வுப்பூர்வமான நிகழ்வுகள் அடங்கிய வீடியோ ஒன்றை சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.


அதில் பேசியுள்ள மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த முன்னாள் வீரர் இயன் பிஷப் “இரண்டு முறை ஒருநாள் உலகக்கோப்பை மற்றும் இரண்டு முறை டி-20 உலகக்கோப்பையை வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி, தற்போது சந்தித்து இருப்பது என்பது மிகப்பெரிய சரிவு. அந்த அணி மீண்டு வரவேண்டும் என்றால் மேற்கிந்திய தீவுகள் அணியின் கிரிக்கெட் சம்மேளனம் அமைப்பு ரீதியாகவும், உட்கட்டமைப்பு அடிப்படையில் மறுமலர்ச்சி அடைய வேண்டியது அவசியம்” என நா தழுதழுக்க வலியுறுத்தினார்.


கெயில் கோரிக்கை:


ஐசிசி வெளியிட்ட அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், பலரும் அந்த அணிக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் வீரர் கிறிஸ் கெயில், அந்த வீடியோவிற்கு கீழே ”இந்த பதிவை டெலிட் செய்யுங்கள், நன்றி” என குறிப்பிட்டுள்ளார். இதை கண்ட ரசிகர்கள் பலரும், ஒருகாலத்தில் கிரிக்கெட்டையே கட்டி ஆண்ட மேற்கிந்திய தீவுகள் அணிக்கு தற்போது இப்படி ஒரு நிலையா என, கமெண்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.