5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில், ஏற்கனவே முதல் 2 போட்டிகளை வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்டில் வென்று தொடரை வெல்லும் முனைப்புடன் ஆஸ்திரேலியா இன்று களமிறங்குகிறது.


ஆஷஸ் மூன்றாவது போட்டி


ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. லண்டனில் உள்ள பர்மிங்காம் மற்றும் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த முதல் இரண்டு டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி லீட்ஸில் உள்ள ஹெடிங்லியில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் சில நாட்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.



பரபரப்பான லீட்ஸ் மைதானம்


லீட்ஸ் மைதானம் காட்டுத்தீயாக மாறுமளவுக்கு உணர்ச்சிப்பூர்வமான ரசிகர்களை கொண்டுள்ளது. கடைசியாக இங்கு நடைபெற்ற இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, ஸ்டாண்டில் மோதல் ஏற்பட்டது. குடிபோதையில் இருந்த ஒருவர் மேலும் பானம் கேட்ட நிலையில், தர மறுத்ததால் பணிப்பெண்களை துரத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது, பார்வையாளர்கள் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் மீது பிளாஸ்டிக் பாட்டில்களை வீசினர். லீட்ஸ் யுனைடெட்டின் இல்லமான எல்லாண்ட் சாலையில், அவர்கள் தங்கள் எதிரிகள் மீது நாணயங்கள், பாட்டில்கள், லைட்டர்கள் மற்றும் புகை குண்டுகள் போன்ற மோசமான பொருட்களை வீசுவது வழக்கம். இதனால் ஏற்கனவே தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கும் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முக்கியமான போட்டி இங்கு நடைபெறுவதால், பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய வீரர்கள் தங்கள் குடும்பத்தினருக்கு அதிக பாதுகாப்பு கேட்டுள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்: Karnataka High Court: பெண் என்ற காரணத்துக்காக ஜாமீன் வழங்க முடியாது.. நீதிமன்றம் அதிரடி.. வழக்கு பின்னணி என்ன?



இன்னும் முடியாத பேர்ஸ்டோ பஞ்சாயத்து


ஏனெனில் கடந்த டெஸ்டில் கடைசி நாளில், முக்கியமான விக்கெட்டாக இருந்த, பேர்ஸ்டோ விக்கெட் சர்ச்சைக்குரிய ரன் அவுட் ஆக மாறியதால் அதுகுறித்த விவாதம் இன்னும் ஓயாத நிலையில் இந்த டெஸ்ட் தொடங்க இருக்கிறது. ஷார்ட் பிட்ச் பந்தை குனிந்து தவிர்த்துவிட்டு, எதிர் முனை பேட்ஸ்மேனிடம் பேச சென்ற பேர்ஸ்டோவை, பின்னால் இருந்து விக்கெட் கீப்பர் ஸ்டம்பில் அடித்து ரன் அவுட் செய்தார். பேர்ஸ்டோ கிரீசுக்கு வெளியில் இருந்து பேட்டிங் செய்து, அப்படியே நடந்து சென்றதால், விதிமுறைப்படி அது அவுட் என்றானது. இருப்பினும் முக்கியமான நாளில் இப்படி வெல்வதைதான் ஆஸ்திரேலிய அணி விரும்புகிறதா என்று அந்த அணியின் ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப் மீது கேள்விகள் எழுந்தன. இந்த விவாதங்கள் இன்னும் ஓயாத நிலைய, இதனால் அதன் எதிர்வினைகளை மைதானங்களில் ரசிகர்கள் காட்டக்கூடும் என்பதால் பாதுகாப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. 



பிட்ச் எப்படி இருக்கும்?


இன்றைய போட்டியை பொருத்தவரை, ஹெடிங்லியில் உள்ள மேற்பரப்பு டெஸ்ட் கிரிக்கெட்டில் பேட்டிங்கிற்கு ஏற்ற சூழ்நிலையை வழங்குகிறது. இரு அணிகளும், குறிப்பாக இங்கிலாந்து இந்தத் தொடரில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் தங்களது ஆக்ரோஷமான அணுகுமுறையை கடைபிடித்துள்ளது, அதுவே இரு போட்டியிலும் முடிவை எட்ட உதவியது. ஹெடிங்லியின் ஆடுகளம் முதல் இரண்டு அல்லது மூன்று நாட்களில் புதிய பந்தில் கூடுதல் பவுன்ஸ் மற்றும் வேகத்தை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடக்கத்தில் வேகத்துக்கு உகந்த பிட்ச் இருப்பதைக் கருத்தில் கொண்டு, இரு அணிகளும் முதலில் பந்துவீசுவதற்கான வாய்ப்பைப் பெற முயற்சிப்பார்கள். ஹெடிங்லியில் 82 டெஸ்ட் போட்டிகளில் முதலில் பந்துவீசிய அணிகள் 34 போட்டிகளிலும்,  முதலில் பேட்டிங் செய்த அணிகள் 29 போட்டிகளிலும் வென்றுள்ளனர்.