Hardik Pandya:  உலகக் கோப்பை கிரிக்கெட்டின் போது ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் - ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவுக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதனால் மைதானத்தில் இருந்து உடனே வெளியேற்றப்பட்ட ஹர்திக் பாண்டியா அதன் பின்னர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இருந்து முற்றிலுமாக விலகினார். இதனால் இவரது கணிக்கால் காயம் சரியாக குறைந்த பட்சம் மூன்று மாத காலமாவது ஆகும் என ஊடகங்களில் செய்திகள் வெளியானது. இதனால் உலகக் கோப்பைக்குப் பிறகான இந்திய கிரிக்கெட் அணியை டி20 தொடர்களில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகவும் சூர்யகுமார் யாதவ் வழிநடத்தினார். 


ஐபிஎல் 2024ல் இருந்து ஹர்திக் பாண்டியா விலகலா?


அடுத்த ஆண்டு  ஐபிஎல் தொடருக்கு மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட ஹர்திக் பாண்டியா, தொடரிலிருந்து விலகுவதாக தகவல் இந்த வாரத்தின் தொடக்கத்தில் வெளியானது. கணுக்கால் காயம் காரணமாக அவர் தொடர் முழுவதும் பங்கேற்கமாட்டார் எனவும் கூறப்பட்டது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணியை சூர்யகுமார் யாதவ் அல்லது ஜஸ்பிரித் பும்ரா மும்பை இந்தியன்ஸ் அணியை வழிநடத்தலாம் என கூறப்பட்டுவந்தது.






மும்பை அணிக்கு வந்த பாண்டியா:


மும்பை இந்தியன்ஸ் அணியின் மூலம் கடந்த 2015ஆம் ஆண்டு  ஐபிஎல் தொடரில் அறிமுகமான ஹர்திக் பாண்டியா, காலப்போக்கில் அணியின் தவிர்க்க முடியாத ஆல்-ரவுண்டராக உருவெடுத்தார். பல போட்டிகளில் ஒற்றை ஆளாக அணியின் வெற்றிக்காக களத்தில் நின்று ஒந்மேன் ஷோ காட்டியுள்ளார். இந்த சூழலில் தான் கடந்த 2022ம் ஆண்டு அவர் மும்பை அணியால் விடுவிக்கப்பட்டு, குஜராத் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இவரது தலைமையில் குஜராத் டைட்டன்ஸ் அணி அறிமுகத் தொடரிலேயே கோப்பையை வென்றது. அதன் பின்னர் அதாவது 2023ஆம் ஆண்டு அவரது தலைமையில் குஜராத் அணி இறுதிப் போட்டிக்குச் சென்று கடைசி பந்தில் கோப்பையை இழந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் மும்பை அணிக்கு திரும்பியுள்ள அவருக்கு அணி நிர்வாகம் கேப்டன் பொறுப்பு வழங்கியுள்ளது. 


இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். காயம் காரணமாக ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் களமிறங்குவது கேள்விக்குறியாகி இருந்த நிலையில், இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் ஹர்திக் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் களமிறங்குவாரா எனத் தெரியவில்லை என்றாலும், 2024ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் கட்டாயம் களமிறங்குவார் என எதிர்பார்த்து காத்துள்ளனர்.


காயத்தில் இருந்து மீண்டு ஹர்திக் பாண்டியா எப்போது சர்வதேச போட்டிக்கு திரும்புவார் என்பதில் தற்போது வரை எந்த தெளிவும் இல்லை. இந்த நிலையில் அவரது கேப்டன் பொறுப்பை வகித்து வந்த சூர்யகுமார் யாதவும், காயம் காரணமாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரிலிருந்து விலகியுள்ளார். 2024ம் ஆண்டு ஜுன் மாதத்தில் டி-20 உலகக் கோப்பை நடைபெற உள்ள நிலையில், முக்கிய வீரர்கள் காயமடைந்து இருப்பது இந்திய அணிக்கு பாதகமாக பார்க்கப்படுகின்றது.