இந்திய அணி தற்போது தென்னாப்பிரிக்கா சென்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. ஏற்கனவே, இந்த சுற்றுப்பயணத்தில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. தொடர்ந்து, இந்திய அணி ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றியுள்ளது.  


அடுத்தப்படியாக, இப்போது இந்திய அணி வருகின்ற டிசம்பர் 26 முதல் டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. மேலும், இந்த டெஸ்ட் தொடருக்கான அணியை பிசிசிஐ நிர்வாகம் நீண்ட காலத்திற்கு முன்பே அறிவித்தது. ஆனால், இப்போது இந்த தொடர் தொடங்குவதற்கு சற்று முன்பு பேக் அப் ஓப்பனராக அணியில் சேர்க்கப்பட்ட ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக முழு தொடரிலிருந்தும் வெளியேறினார். இதையடுத்து, ருதுராஜுக்கு பதிலாக அபிமன்யு ஈஸ்வரன் பெயரை அறிவித்தது. இந்தநிலையில் யார் இந்த அபிமன்யு ஈஸ்வரன் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம். 


யார் இந்த அபிமன்யு ஈஸ்வரன்..?


அபிமன்யு ஈஸ்வரன் நீண்ட காலமாக இந்திய ஏ அணிக்காக விளையாடி வருவதுடன், அந்த அணியின் கேப்டனாகவும் இருந்துள்ளார். உள்நாட்டு கிரிக்கெட்டில், பெங்கால் அணிக்காக பல முக்கியமான போட்டிகளில் தலைமையேற்று சிறப்பாக செயல்பட்டுள்ளார். 28 வயதான இந்த பேட்ஸ்மேன் இதுவரை 88 முதல் தர போட்டிகளில் விளையாடி இதுவரை 47.24 சராசரியில் 6567 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 22 சதங்களும் 26 அரை சதங்களும் அடங்கும்.


அபிமன்யு ஒரு தொடக்க ஆட்டக்காரராக உள்நாட்டு கிரிக்கெட்டில் ஒரு சிறந்த பேட்ஸ்மேன் என்றே கூறலாம். கடந்த 2018-19 ரஞ்சி சீசனில் பெங்கால் அணிக்காக அதிக ரன்கள் எடுத்தவர் என்ற பெருமையை பெற்றார்,  அந்த சீசனில் அவர் வெறும் 6 போட்டிகளில்  விளையாடி 861 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. லிஸ்ட் ஏ கேரியரை பொறுத்தவரை, அபிமன்யு ஈஸ்வரன் 88 போட்டிகளில் மட்டுமே விளையாடி அதில் அவர் 47.7 சராசரியுடன்  9 சதங்கள், 23 அரைசதங்களுடன் 3847 ரன்கள் எடுத்துள்ளார். 


கடந்த ஆண்டே அறிமுகமாக வேண்டியது..? 


அபிமன்யு ஈஸ்வரன் இந்திய டெஸ்ட் அணிக்காக நீண்ட ஆண்டுகளாக காத்திருக்க வேண்டிய சூழல் இருந்து வருகிறது. கடந்த ஆண்டு, அபிமன்யு ஈஸ்வரன் வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் ஷர்மாவுக்கு பதிலாக மாற்று வீரராக அறிவிக்கப்பட்டார். ஆனால் அபிமன்யு-க்கு விளையாடும் பதினொன்றில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.


பெங்கால் அணியை தவிர, அபிமன்யு ஈஸ்வரன் இந்தியா அண்டர்-23, இந்தியா ப்ளூ, இந்தியா-ஏ, இந்தியா-பி, ரெஸ்ட் ஆஃப் இந்தியா, போர்ட் ஆஃப் லெவன், இந்திய போர்ட் ஆஃப் லெவன், இந்தியா-ரெட் மற்றும் கிழக்கு மண்டலத்திற்காக விளையாடியுள்ளார். ஆனால், இதுவரை அபிமன்யு ஈஸ்வரனுக்கு ஐபிஎல் தொடரில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அபிமன்யு ஈஸ்வரன் அறிமுகமாகலாம். அப்படி அறிமுகமானால் அபிமன்யு ஈஸ்வரன் சர்வதேச அளவில் தனது உள்நாட்டு ஃபார்மை இதில் கொண்டு வர முடியுமா இல்லையா என்பது இப்போது சுவாரஸ்யமாக இருக்கும்.


தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி


ரோஹித் சர்மா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எஸ். பாரத் (விக்கெட் கீப்பர்), கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், முகேஷ் குமார், பிரசித் கிருஷ்ணா, அபிமன்யு ஈஸ்வரன்