இங்கிலாந்து தொடரில் அசத்திய சர்பராஸ் கான்:
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானவர் சர்பராஸ் கான். அறிமுக போட்டியிலேயே தான் யார் என்பதை அனைவருக்கும் உணர்த்தியவர்.
அந்த வகையில் முதல் போட்டியில் 66 பந்துகள் களத்தில் நின்ற அவர் 9 பவுண்டரிகள் 1 சிக்ஸர் உட்பட மொத்தம் 62 ரன்கள் எடுத்தார். அறிமுக போட்டியிலேயே அரைசதம் விளாசியதன் மூலம் அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார். அதேபோல், அவரை இந்த இடத்திற்கு கொண்டுவருவதற்கு முக்கிய பங்காற்றியவர் அவரது தந்தை நெளசாத் கான் தான்.
சொன்னதைச் செய்த ஆனந்த் மஹிந்திரா:
அந்த வகையில் தன்னுடைய மகன் முதன் முறையாக சர்வதேச போட்டியில் தன்னுடைய நாட்டிற்காக அறிமுகமான போது உணர்ச்சிவசப்பட்டு அழுதார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா சர்பராஸ் கானின் தந்தையின் கடின உழைப்புக்கு பாராட்டை தெரிவித்தார். மேலும், நௌஷாத் கானை பாராட்டி, அவருக்கு அருமையான பரிசு வழங்குவதாக கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி அறிவித்தார்.
இந்நிலையில் தான் சர்பராஸ் கானின் தந்தை பரிசாக மஹிந்திரா தார் காரை பரிசாக வழங்கியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.