இங்கிலாந்து மண்ணில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மகுடத்திற்கான தோல்விக்கு பிறகு, இந்திய அணியில் புதிய மாற்றங்களை கண்டிப்பாக ஏற்படுத்த வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கைகளை வலுவாக எழுப்பி வருகின்றனர். அதில், அவர்களின் முதல் கோரிக்கையாக பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டை மாற்ற வேண்டும் என்பதே ஆகும். அவரது பயிற்சியின் கீழ் இந்திய அணியின் செயல்பாடு எப்படி இருந்தது என்பதை கீழே விரிவாக காணலாம்.
ஜாம்பவான் கிரிக்கெட் வீரரான ராகுல் டிராவிட் இந்திய அணியின் 19 வயதுக்குட்பட்டோர் மற்றும் ஏ அணிகளுக்கு சிறந்த பயிற்சியாளராக திகழ்ந்ததையடுத்து, இந்திய சீனியர் அணிக்கு பயிற்சியாளராக கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் நியமிக்கப்பட்டார்.
- ராகுல்டிராவிட் பயிற்சியின் கீழ் இந்தியா களமிறங்கிய முதல் தொடரிலே நியூசிலாந்திற்கு எதிரான டி20 தொடர், டெஸ்ட் தொடரை கைப்பற்றி அசத்தியது.
- தென்னாப்பிரிக்க மண்ணில் நடந்த முதல் டெஸ்டை வென்ற இந்திய அணி அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியுற்று தொடரை இழந்தது.
- பின்னர், அதே தொடரில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரையும் அவர்கள் மண்ணிலே இந்தியா இழந்தது.
- அதன்பின்பு இந்திய மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடந்த ஒருநாள் மற்றும் டி20 தொடரை வென்று கம்பேக் தந்தது.
- சொந்த மண்ணில் கோலோச்சி வரும் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு பிறகு இந்தியா வந்த இலங்கை அணியை 3-0 என்று டி20 தொடரில் வீழ்த்தியது.
- ரோகித்சர்மா தலைமையில் இலங்கை அணியை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தியது.
- அதன்பின்பு இந்திய மண்ணில் நடந்த தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் தொடர் 2-2 என்று முடிந்தது.
- அயர்லாந்துக்கு சென்ற இந்திய அணி அங்கு நடந்த டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது.
- இங்கிலாந்தில் கைவிடப்பட்ட கடைசி டெஸ்ட் போட்டி மீண்டும் நடத்தப்பட்டபோது, அந்த போட்டியை டிரா செய்தாலே இந்தியா வென்றுவிடும் என்ற நிலை இருந்தபோது டிராவிட் பயிற்சியில் களமிறங்கிய இந்தியா அந்த போட்டியில் தோல்வி அடைந்தது. இதனால், இங்கிலாந்து மண்ணில் தொடரை வெல்லும் வாய்ப்பு பறிபோனது.
- இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த டி20 மற்றும் ஒருநாள் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்றது.
- வெஸ்ட் இண்டீசில் நடந்த ஒருநாள் தொடரை ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி 3-0 என்ற கணக்கிலும், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி 4-1 என்று டி20 தொடரையும் கைப்பற்றியது.
- ஆசிய கோப்பை தொடருக்கு தயாராகும் விதமாக ஜிம்பாப்வே தொடரின்போது ராகுல் டிராவிட் ஓய்வுக்கு சென்றார். அதனால், அவருக்கு பதிலாக அந்த தொடருக்கு லட்சுமணன் பயிற்சியாளராக சென்றார்.
- லட்சுமணன் தலைமையில் ஜிம்பாப்வே சென்ற இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.
- ராகுல் டிராவிட் தலைமையில் இந்திய அணி களம் கண்ட முதல் பன்னாட்டு தொடர் ஆசிய கோப்பை. இந்த தொடரில் லீக் போட்டிகளில் வென்றாலும் இந்திய அணி முக்கியமான ஆட்டத்தில் தோற்று வெளியேறியது.
- ஆசிய கோப்பை தோல்விக்கு பிறகு இந்தியாவில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 நடந்தது. அதில் இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்றது.
- அடுத்து தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக நடந்த டி20, ஒருநாள் தொடரை வென்றது.
- கடந்தாண்டு டி20 உலககோப்பையில் ஆஸ்திரேலியாவிற்கு டிராவிட் பயிற்சியின் கீழ் இந்தியா சென்றது. அரையிறுதியில் இங்கிலாந்து அணியுடன் 10 விக்கெட் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்றது.
- வங்காளதேசம் சென்ற இந்திய அணி 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும், 2-0 என்று டெஸ்ட் தொடரையும் வென்றது.
- நியூசிலாந்து அணியை 3-0 என்ற கணக்கிலும், டி20 தொடரை 2-1 என்ற கணக்கிலும் இந்திய மண்ணில் இந்தியா வீழ்த்தியது.
- இந்தியாவில் நடந்த ஆலன் பார்டர்- கவாஸ்கர் டிராபியை 2-1 என்று கைப்பற்றி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
- அதற்கு அடுத்த இந்தியாவில் நடந்த ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது.
- ஐ.பி.எல். தொடருக்கு பிறகு நேரடியாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு சென்ற இந்திய அணி படுதோல்வி அடைந்தது.
இந்த புள்ளிவிவரங்களை வைத்து பார்க்கும்போது இரு நாடுகள் இடையேயான தொடரில் இந்திய அணி டிராவிட் பயிற்சியில் சிறப்பாக ஆடியுள்ளது. ஆனால், பன்னாட்டு தொடர்களில், சாம்பியன்ஷிப் தொடர்களில் இந்தியா சொதப்பியே உள்ளது. இரு நாட்டு தொடர்களிலும் கிடைத்த வெற்றி பெரும்பாலும் உள்நாட்டு தொடராக உள்ளது.
பலமிகுந்த அணியுடனான போட்டியில் வெளிநாட்டு மண்ணில் வெற்றிகரமான பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இல்லை என்பதையே புள்ளி விவரங்கள் காட்டுகிறது.