இந்தியாவில் நடக்கும் உள்ளூர் தொடரில் மிகவும் பிரபலமானது மற்றும் பழமையானது ரஞ்சி தொடர் ஆகும். இந்த தொடரில் பங்கேற்பதற்காக சில அணிகளுக்கு தகுதிச்சுற்று போட்டி நடக்கும். அதை ரஞ்சி ப்ளேட் தொடர் என்பார்கள். தற்போது அந்த தொடர் நடந்து வருகிறது. அந்த தொடரில் உலக சாதனை ஒன்று படைக்கப்பட்டுள்ளது. 

Continues below advertisement

அடுத்தடுத்து 8 சிக்ஸர்கள்:

குஜராத்தில் உள்ள சூரத்தில் மேகலாயா - அருணாச்சல பிரதேச அணிகள் மோதின. மேகலாயா டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அந்த அணி முதல் இன்னிங்சில் 576 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தபோது அந்த அணிக்காக ஆகாஷ் செளத்ரி களமிறங்கினார்.

 ஏற்கனவே மேகலாய அணி டிக்ளேர் மன நிலையில் இருந்தபோது களமிறங்கிய ஆகாஷ், பந்துகளை சிக்ஸருக்கு அனுப்புவதிலே குறியாக இருந்தார். அதாவது, அடுத்தடுத்து 8 பந்துகளை சிக்ஸருக்கு அனுப்பினார். குறிப்பாக, அருணாச்சல பிரதேச பந்துவீச்சாளர் லிமர் தாபி வீசிய ஒரே ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்களை விளாசினார். ஆகாஷ் செளத்ரி வெறும் 11 பந்துகளில் அரைசதம் விளாசினார். 

Continues below advertisement

அதிவேக அரைசதம்:

உலகளவில் முதல்தரக் கிரிக்கெட்டில் அடிக்கப்பட்ட அதிவேக அரைசதம் இதுவே ஆகும்.  இதற்கு முன்பு இங்கிலாந்தின் வெய்ன் ஒயிட் 12 பந்துகளில் அரைசதம் விளாசியதே அதிவேக அரைசதமாக இருந்தது. 2012ம் ஆண்டு படைக்கப்பட்ட அந்த சாதனையை 13 ஆண்டுகள் கழித்து இந்திய வீரர் உடைத்துள்ளார். மேலும், தொடர்ச்சியாக 8 சிக்ஸர்கள் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையையும் இவர் படைத்துள்ளார்.

ஆகாஷ் செளத்ரி 14 பந்துகளில் 50 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தார். அதிவேக அரைசதம் விளாசிய ஆகாஷ் செளத்ரியை வீரர்கள், ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். மேகலாயா போன்ற வளர்ந்து வரும் அணியின் வீரர் இத்தகைய அரிய சாதனையை படைத்திருப்பது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது.

தத்தளிக்கும் அருணாச்சல பிரதேசம்:

முன்னதாக, மேகலாய அணியின் அர்பித் 207 ரன்களும், கேப்டன் கிஷன் 119 ரன்களும், தலால் 144 ரன்களும் எடுத்தனர். 628 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை எடுத்து மேகலாயா டிக்ளேர் செய்தது. பின்னர், முதல் இன்னிங்சை ஆடிய அருணாச்சல பிரதேச அணி  73 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஃபாலோ ஆன் ஆகி 2வது இன்னிங்சில் ஆடி வரும் அருணாச்சல அணி 29 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

இந்தியாவின் தமிழ்நாடு, மகாராஷ்ட்ரா, டெல்லி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் கிரிக்கெட் மிகவும் பிரபலமாக இருந்தாலும் வடகிழக்கு மாநிலங்களைப் பொறுத்தமட்டில் கிரிக்கெட் மற்ற மாநிலங்கள் அளவிற்கு வளரவில்லை. இதன் காரணமாகவே அங்கு போதுமான வீரர்கள் உருவாக முடியாமல் தடுமாறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.