பைசலாபாத்: பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நவம்பர் 8 நேற்று நிறைவடைந்தது. தொடரின் கடைசிப் போட்டியில் பாகிஸ்தான் அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-1 என தொடரை கைப்பற்றியது. தொடரை இழந்த போதிலும் தென்னாப்பிரிக்க விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் குயின்டன் டி காக் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்
தோனியின் சாதனையை சமன் செய்த டி காக்
ஓய்விலிருந்து திரும்பிய டி காக், தொடரின் மூன்று போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி 239 ரன்கள் (ஒரு சதம், இரண்டு அரைசதங்கள்) குவித்தார். இதனால் அவர் தொடர் நாயகன் விருதைப் பெற்றார். ஒருநாள் கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பராக அவர் வென்ற ஏழாவது தொடர் நாயகன் விருதாகும். இதன் மூலம் அவர் முன்னாள் இந்திய கேப்டன் எம்.எஸ். தோனியின் சாதனையை சமன் செய்துள்ளார்.
7,000 ரன்கள் கிளப்பில் இணைந்தார்:
மூன்றாவது போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம் டி காக் தனது ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையில் 7,000 ரன்களை எட்டினார். இதை 158 இன்னிங்ஸ்களில் முடித்த அவர், கேன் வில்லியம்சன் (159) மற்றும் விராட் கோலி (161) ஆகியோரை முந்தி இரண்டாவது வேகமான பேட்ஸ்மேன் ஆனார்.
தென்னாப்பிரிக்காவுக்காக அதிக ரன்கள்
டி காக் இதுவரை 223 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 46.72 சராசரியுடன் 7,009 ரன்கள் எடுத்துள்ளார். இதன்மூலம் அவர் கிரேம் ஸ்மித்தை (6,989) முந்தி தென்னாப்பிரிக்காவின் ஐந்தாவது அதிக ரன்கள் எடுத்த வீரராக முன்னேறினார்
தென்னாப்பிரிக்காவுக்காக ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள்:
-
ஜாக்ஸ் காலிஸ் – 11,550
-
ஏபி டி வில்லியர்ஸ் – 9,427
-
ஹாஷிம் அம்லா – 8,113
-
ஹெர்ஷல் கிப்ஸ் – 8,094
-
குயின்டன் டி காக் – 7,009
ஒருநாள் போட்டிகளில் விக்கெட் கீப்பர்களுக்கான தொடர் நாயகன் சாதனைகள்:
-
7 – குயின்டன் டி காக்
-
7 – எம்.எஸ். தோனி
-
6 – முஷ்ஃபிகுர் ரஹீம்
-
5 – ஷாய் ஹோப்
7,000 ரன்களை வேகமாக அடைந்தவர்கள் (இன்னிங்ஸ் அடிப்படையில்):
-
150 – அசீம் அம்லா
-
158 – குயின்டன் டி காக்
-
159 – கேன் வில்லியம்சன்
-
161 – விராட் கோலி
-
166 – ஏபி டி வில்லியர்ஸ்
-
168 – ஜோ ரூட்
சர்வதேச கிரிக்கெட்டுக்கு குயின்டன் டி காக் திரும்பியது, தென்னாப்பிரிக்கா அணிக்கு நல்ல உத்வேகத்தை அளித்துள்ளது.