பாகிஸ்தான் கிரிக்கெட்டில் சமீப காலமாக போலி வயதை சொல்லி அணிக்கு ஆட வைப்பதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர் ஒருவர் சர்ச்சையில் சிக்கியுள்ளார். 


பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் எட்டாவது சீசனில் நேற்று, இஸ்லாமாபாத் யுனைடெட் மற்றும் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் இடையேயான போட்டியில் இஸ்லாமாபாத் யுனைடெட் வெற்றி பெற்றது. அதில், 16 வயது பந்துவீச்சாளர் அய்மல் கான், குவெட்டா அணிக்காக டி20 போட்டியில் அறிமுகமானார். 


அவருக்கு 16 வயது என்று சொல்லப்பட்டாலும், பார்க்கையில் அப்படி தெரியவில்லை. 20 வயது இளைஞர் போல அய்மல் கான் தோற்றம் அளிக்கிறார். இது குறித்து பாகிஸ்தான் பத்திரிகையாளர் சாஜ் சாதிக் ட்வீட் செய்துள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் 16 வயது வீரராக பதிவு செய்யப்பட்டிருக்கிறார் அய்மல் கான் என அவர் குறிப்பிட்டுள்ளார். 


வீரர்களின் உண்மையான வயது என்ன என்பதை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உறுதி செய்ய வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார் பாகிஸ்தான் பத்திரிகையாளர் சாஜ் சாதிக்.


முதல் போட்டியிலேயே காலின் மன்ரோவின் விக்கெட்டை எடுத்துள்ளார். 4 ஓவர்கள் பந்து வீசி 55 ரன்களை விட்டு கொடுத்துள்ளார். Cricinfo இணையதளம் வெளியிட்ட தகவலின்படி, அய்மல் கானின் வயது 16 ஆண்டுகள் 246 நாட்கள். கடந்த 2006ஆம் ஆண்டு, ஜூன் 24ஆம் தேதி பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பிறந்துள்ளார். அதன் தலைநகரான பெஷாவர் ஆகும். 


இந்த மாகாணத்தில் பஷ்டூன்களின் மக்கள் தொகை அதிகம். குறைந்த வயதில் வயதானவர் போல் தோற்றம் அளிப்பது பதான்களின் பொதுவான பிரச்சனை என்று சிலர் கூறுகிறார்கள். சிறிய வயதிலேயே வயது வந்தவராக அய்மல் கான் தோற்றம் அளிக்கலாம்.


இம்மாதிரியான வயது மோசடி பாகிஸ்தானில் பொதுவானதாக இருந்தால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் நஜம் சேத்தி அதை தடுக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.


முன்னதாக, ரமீஸ் ராஜா பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருக்கும் போது, ​​ஒரு திட்டத்தை கொண்டு வர இருந்தார். அறிவியல் பரிசோதனையின் மூலம் வீரர்களின் உண்மையான வயதை கண்டுபிடிக்க அவர் திட்டமிட்டிருந்தார். 


2022 டி20 உலகக் கோப்பையில் விளையாடிய இப்திகார் அகமது அனைவரின் கவனத்தையும் பெற்றிருந்தார். காரணம், பார்ப்பதற்கு 40 வயது மேல் தோற்றம் அளித்தாலும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட தகவலின்படி அவருக்கு வயது 32.


அதேபோல, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஜாம்பவானான ஷாஹித் அப்ரிடியின் உண்மையான வயது குறித்து தற்போது வரை சர்ச்சை நீடித்து வருகிறது. ஷாஹித் அப்ரிடியின் பிறந்த ஆண்டு, 1980ஆம் ஆண்டு என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட தரவுகளில் கூறப்பட்டுள்ளது.


ஆனால், தன்னுடைய சுயசரிதையில் தன்னுடை பிறந்த வயது 1975ஆம் ஆண்டு என அப்ரிடி குறிப்பிட்டுள்ளார்.