13வது உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் கடந்த 5ஆம் தேதி முதல் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இதில் மொத்தம் 10 அணிகள் களமிறங்கியுள்ளது. இதில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அரையிறுதிக்கு முன்னேறும்.


குர்பாஸ் அதிரடி:


 இந்நிலையில் இன்று அதாவது அக்டோபர் 15ஆம் தேதி நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து அணி ஆஃப்கானிஸ்தான் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டி டெல்லியில் உள்ள ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச முடிவு செய்தது. 


அதன்படி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணி இங்கிலாந்து அணியின் பந்து வீச்சினை துவம்சம் செய்தது.  குறிப்பாக தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான குர்பாஸ் பந்துகளை பவுண்டரிக்கும் சிக்ஸருக்கும் விளாசினார். மற்றொரு ஆட்டக்காரர் இப்ராஹிம் பொறுமையாகவே விளையாடி வந்தார். இவர்கள் இருவரும் வலுவான தொடக்கத்தினை அமைத்துக் கொடுத்தனர்.


இக்ரம் அதிரடி:


சிறப்பாக விளையாடி வந்த ஆஃப்கானிஸ்தான் அணி தனது முதல் விக்கெட்டினை 114 ரன்களுக்கு இழந்தது. தொடக்க வீரர்களில் குர்பாஸ் மட்டும் 57 பந்துகளில் 8 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் விளாசி 80 ரன்கள் குவித்து மிரட்டினார். முதல் விக்கெட்டினை இழந்த பின்னர் அடுத்த மூன்று விக்கெட்டுகளை 122 ரன்களுக்கு இழந்தது. அதன் பின்னர் போட்டி மெல்ல மெல்ல இங்கிலாந்து கட்டிப்பாட்டிற்கு வந்தது. ஆஃப்கானிஸ்தான் தரப்பில் அதன் பின்னர் களமிறங்கிய வீரர்கள் மிகச் சிறப்பாக தங்களது பங்களிப்பை அளித்தனர் இதனால் ஆஃப்கான் அணியின் ரன்ரேட் சீராக உயர்ந்தது. 


இறுதியில் ஆஃப்கானிஸ்தான் அணி 49.5  ஓவர்கள் முடிவில்  அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 284 ரன்கள் சேர்த்தது. ஆஃப்கானிஸ்தான் தரப்பில் குர்பாஸ் 80 ரன்களும், இக்ரம் 58 ரன்களும் அதிகபட்சமாக விளாசினர்.  இதில் இக்ரம் கடைசி நேரத்தில் பொறுப்பாகவும் சிறப்பாகவும் விளையாடி ஆஃப்கான் அணி நல்ல ஸ்கோரை எட்ட உதவினார். இங்கிலாந்து தரப்பில், அடில் ரஷித் மட்டும் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இங்கிலாந்து அணி தரப்பில் சாம் கரன் மற்றும் வோக்ஸ் தலா 4 ஓவர்கள் பந்து வீசி 40 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்தனர். 


பேட்டிங்கிற்கு சாதகமான இந்த மைதானத்தில் ஆஃப்கானிஸ்தான் அணி எடுத்துள்ள இந்த ரன்கள் போதுமானது இல்லை. இருப்பினும் ஆஃப்கானிஸ்தான் தரப்பில் உள்ள சுழற்பந்து வீச்சு அந்த அணிக்கு சாதகமான முடிவைப் பெற்றுத் தருமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.