CBSE ஒவ்வொரு ஆண்டும் கிளஸ்டர்கள் /மண்டல மற்றும் தேசிய அளவில் விளையாட்டு நிகழ்வுகளை ஏற்பாடு செய்கிறது. 2023-24 ஆம் ஆண்டிற்கான கிளஸ்டர்/மண்டல மற்றும் தேசிய அளவிலான போட்டிகள் நடைபெறுகிறது. கிளஸ்டர்/மண்டலம் அக்டோபர் 01 ஆம் தேதி முதல் அக்டோபர் 25 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்குப் பிறகு தேசிய போட்டிகள் நவம்பர் 1 முதல் நவம்பர் 10 ஆம் தேதி வரை நடைபெறும். 2023-24 ஆம் ஆண்டுக்கான வயதுப் பிரிவு முடிவு செய்யப்பட்டு 11,14,17 மற்றும் 19 வயதுக்கு உட்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது.




மண்டல அளவிலான வில்வித்தை போட்டிகள்:


பல்வேறு வகையான போட்டிகள் இதில் நடைபெறுகிறது. அந்த வகையில் வில்வித்தை போட்டிகளும் நடைபெறுகிறது. அந்த வகையில் தென் மண்டலத்திற்கு உட்பட்ட வில்வித்தை போட்டிகள் சென்னையில் நேற்று முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. சென்னை ஓ.எம்.ஆரில்  அருகில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் இந்த வில்வித்தை போட்டிகள், நேற்று முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டு பல்வேறு பிரிவுகளில் வில்வித்தை போட்டிகளில் விளையாடி வருகின்றனர்.




சகதியில் நின்று விளையாடிய வீரர்கள், வீராங்கனைகள்:


வில்வித்தை போட்டிகள் என்பதால் திறந்தவெளியிலேயே நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நேற்று நள்ளிரவு சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதியில் கனமழை பெய்தது. அந்த வகையில் வில்வித்தை போட்டிகள் நடைபெறும் பகுதியிலும் கன மழை பெய்ததால் விளையாட்டு மைதானம் முழுவதும் தண்ணீரில் நிரம்பி இருந்தது.


இந்த நிலையில் இன்று காலை 7 மணி அளவில் போட்டிகள் துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்று தாமதமாகவே போட்டிகள் துவங்கியிருந்தது. மழை காரணமாக மைதானத்தில் தண்ணீர் தேங்கி இருந்ததால் வில்வித்தை விளையாட வந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கடும் அவதி அடைந்தனர். குறிப்பாக, தண்ணீர் தேங்கி இருந்ததால் வீரர்கள் நடந்து செல்வதற்கு கூட முடியாமல் தவித்தனர். முறையான தண்ணீர் வடிகால் வசதி செய்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது என்று வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தெரிவித்தனர்.




இது தொடர்பாக, விழா ஏற்பாட்டாளர்களை தொடர்பு கொண்டு கேட்ட பொழுது , மழையின் காரணமாக  மைதானத்தில் தண்ணீர் தேங்கி இருந்தது, எனவே அரை மணி நேரம் போட்டி தாமதமாகவே துவங்கியது. இது குறித்து whatsapp மூலம் அனைவருக்கும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டது. மண் கொட்டி இடத்தை சரி செய்த பிறகு போட்டி துவங்கியது என விளக்கம் அளித்தார்.