உலகக் கோப்பை 2023ல் இன்றைய 39வது ஆட்டத்தில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா அணியும், ஆப்கானிஸ்தான் அணியும் மோதி வருகிறது. இரு அணிகளும் மோதும் இந்த போட்டியானது மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மதியம் 2 மணிக்கு தொடங்கியது. 



முதலில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஹஸ்மத்துல்லா ஹாகிதி பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன் அடிப்படையில் ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஜத்ரன் மற்றும் குர்பாஸ் களமிறங்கினர். களமிறங்கியது முதலே இவர்கள் இருவரும் அதிரடியை கையில் எடுத்தனர். குர்பாஸ் வழக்கம்போல் அதிரடியாக தொடக்கம் தந்து 25 பந்துகளில் 21 ரன்கள் எடுக்க, ஆப்கானிஸ்தான் அணி முதல் விக்கெட்டுக்கு 38 ரன்கள் எடுத்திருந்தது. 


அடுத்தாக, ஜத்ரன் உடன் இணைந்த ரஹ்மத் ஷா ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களின் பந்தை சோதிக்க தொடங்கினர். இருவரும் சிறந்த பார்ட்னர்ஷிப்பை அமைத்து அசத்த தொடங்கினர். உள்ளே வந்த ரஹ்மத் ஷா 44 பந்துகளில் 30 ரன்களை குவித்து அவுட்டாக, தொடக்க வீரராக களமிறங்கிய ஜத்ரன் இந்த உலகக் கோப்பையில் தனது 2வது அரைசதத்தை கடந்தார். 


கேப்டன் ஹாகிதியுடன் மீண்டும் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆப்கானிஸ்தான் அணிக்கு ரன்களை சேர்க்க தொடங்கினார் ஜத்ரன். ஹாகிதி நிதாதனுடன் ரன்களை சேர்க்க சேர்க்க, தனது முதல் உலகக் கோப்பை சதத்தை நோக்கி நகர்ந்தார் ஜத்ரன். 


43 பந்துகளில் 26 ரன்கள் எடுத்திருந்த கேப்டன் ஹாகிதி, ஸ்டார்க் வீசிய 38 வது ஓவரில் க்ளீன் போல்டாக, ஆப்கானிஸ்தான் அணியின் ஸ்கோர் 173 ஆக இருந்தது. அதன்பிறகு களம் கண்ட ஓமர்சாய் தன் பங்கிற்கு 2 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரியுடன் 22 ரன்கள் குவித்தார். இதன்மூலம், ஆப்கானிஸ்தான் 200 ரன்களை கடந்தது. 


இப்ராஹிம் ஜத்ரன் சதம்:


தொடர்ந்து, பொறுமையும் கடமையுமாக விளையாடிய ஜத்ரன் சதம் அடித்து, ஒருநாள் உலகக் கோப்பை வரலாற்றில் ஆப்கானிஸ்தான் அணிக்காக முதல் சதத்தை பதிவு செய்தார். அடுத்ததாக உள்ள வந்த முன்னாள் ஆப்கானிஸ்தான் கேப்டன் நபி, ஹசல்வுட் வீசிய 46வது ஓவரில் ஒரு சிக்ஸரை பறக்கவிட்டு, க்ளீன் போல்டானார். மேக்ஸ்வெல் வீசிய 47வது ஓவரின் முதல் பந்திலேயே சிக்ஸர் பறக்கவிட்ட ரஷித் கான், அதே ஓவரில் ஒரு பவுண்டரியை தெறிக்கவிட்டார். இதன்மூலம், ஆப்கானிஸ்தான் அணி 250 ரன்களை கடந்தது. 


தொடர்ந்து இருவரும் இணைந்து அவ்வபோது கிடைக்கும் பந்துகளை எல்லாம் சிக்ஸர் மற்றும் பவுண்டரிகளாக விரட்ட, 50 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் 5 விக்கெட் இழப்பிற்கு 291 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக பேட்டிங்கில் உள்ளே வரும் ஆஸ்திரேலிய அணி 292 ரன்கள் எடுத்து வெற்றிபெற வேண்டும். 


ஆப்கானிஸ்தான் அணியில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் ஜத்ரன் 129 ரன்களுடனும், ரஷித் கான் 35 ரன்களுடனும் எடுத்திருந்தனர். 


ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக ஜோஸ் ஹசல்வுட் 2 விக்கெட்களும், ஸ்டார்க், மேக்ஸ்வெல் மற்றும் ஜாம்பா தலா 1 விக்கெட்களும் வீழ்த்தியிருந்தனர்.