India pakistan Semi final: உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் தகுதி பெற உள்ள, சாத்தியக்கூறுகள் கீழே விளக்கப்பட்டுள்ளன.
உலகக் கோப்பை அரையிறுதி:
சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் 12வது ஒருநாள் உலகக் கோப்பை போட்டி, இந்தியாவில் கடந்த 5ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. லீக் சுற்று முடிவடைய உள்ள நிலையில், இதுவரை இந்தியா மற்றும் தென்னாப்ரிக்கா அணிகள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளன. மூன்றாவது இடம் ஆஸ்திரேலிய அணிக்கு ஏறக்குறைய உறுதியாகிவிட்ட நிலையில், நான்காவது இடத்திற்கு நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் முட்டி மோதி வருகின்றன. லீக் சுற்றின் முடிவில் ஒருவேளை பாகிஸ்தான் அணி, புள்ளிப்பட்டியலில் பாகிஸ்தான் அணி நான்காவது இடம்பிடித்தால் அரையிறுதியில் இந்திய அணியை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். இந்த சூழல் ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், அதற்கான சாத்தியக்கூறுகள் கீழே என்ன என்பதை சற்றே விரிவாக ஆராயலாம்.
அரையிறுதியில் இந்தியா - பாகிஸ்தான் மோதல்?
வாய்ப்பு- 1:
நியூசிலாந்து அணி இலங்கையிடம் தோல்வியுற, பாகிஸ்தான் அணி இங்கிலாந்தை வீழ்த்தினால் 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேறும். அதேநேரம், ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்ரிக்கா அணிகளுக்கு எதிரான இரண்டு லீக் போட்டிகளிலும், ஆப்கானிஸ்தான் அணி தோல்வியுற வேண்டும். அவ்வாறு நடந்தால், புள்ளிப்பட்டியலில் பாகிஸ்தான் நான்காவது இடத்தை உறுதி செய்வதோடு, அரையிறுதியில் இந்திய அணியுடன் மோதக்கூடும்.
வாய்ப்பு -2:
இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்தும், இங்கிலாந்துக்கு எதிராக போட்டியில் பாகிஸ்தானும் வெற்றி பெற்று, மீதமுள்ள இரண்டு போட்டிகளில் ஆப்கானிஸ்தான் தோல்வியுற்றால் நான்காவது இடத்திற்கு பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து இடையே நேரடி போட்டி ஏற்படும். அப்போது ரன் ரேட் அடிப்படையில் நான்காவது இடம் யாருக்கு என்பது தீர்மானிக்கப்படும். +0.398 ரன் ரேட்டில் இருக்கும் நியூசிலாந்தை பின்னுக்கு தள்ள, +0.036 ரன் ரேட்டில் உள்ள பாகிஸ்தான் அணி இங்கிலாந்திற்கு எதிராக அபார வெற்றி பெற வேண்டியது அவசியமாகும். ஆப்கானிஸ்தான் அணியின் ரன் ரேட் மைனஸில் இருப்பதால், மீதமுள்ள போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்றாலும் அரையிறுதி வாய்ப்பு என்பது குறைவாகவே உள்ளது.
வாய்ப்பு - 3:
ஒருவேளை பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளின் இரண்டு போட்டிகளுமே மழையால் கைவிடப்பட்டால், ரன் ரேட் அடிப்படையில் நியூசிலாந்து நான்காவது அணியாக அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறும். ஒரு வேளை நியூசிலாந்து அணியின் போட்டி மட்டும் பாதிக்கப்பட்டு, இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றால், அந்த அணி அரையிறுதிக்கு தகுதி பெறும். அதன் மூலம், இந்தியா மீண்டும் அரையிறுதியில் பாகிஸ்தானை எதிர்கொள்ள முடியும்.