ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில் 48 லீக் ஆட்டங்கள் கொண்ட இந்த தொடரில் தற்போது 7 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளது.
அதில் இன்று (அக்டோபர் 10) நடைபெற்ற 7 வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் வங்கதேச அணிகள் மோதின. இங்கிலாந்து அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி வெற்றி பெற்றது. மேலும், தற்போது 8-வது லீக் போட்டி ஹைதராபாத் நகரில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வீரர் ’அப்துல்லா ஷபீக்’ தனது அறிமுக உலகக் கோப்பையின் முதல் போட்டியில் முதல் சதத்தை பதிவு செய்துள்ளார்.
முன்னதாக இன்று (அக்டோபர் 10) மதியம் 2 மணிக்கு ஹைதராபாத் நகரில் உள்ள ரஜீவ் காந்தி மைதானத்தில் போட்டி தொடங்கியது. அதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, இலங்கை அணியின் பேட்ஸ்மேன்கள் குசல் மெண்டிஸ் மற்றும் சதீர சமரவிக்ரமா பார்ட்னர்ஷிப் அமைத்து சதம் அடித்தனர்.
அந்தவகையில், மெண்டிஸ் 122 ரன்களும் , சதீர சமரவிக்ரமா 108 ரன்களும் அடித்தனர். இவ்வாறாக அந்த அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 344 ரன்கள் குவித்தது.
முதல் போட்டியிலேயே சதம் அடுத்த அப்துல்லா ஷபீக்:
345 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. அந்த வகையில், அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அப்துல்லா ஷபீக் மற்றும் இமாம்-உல்-ஹக் ஆகியோர் களம் இறங்கினர்.
இந்த போட்டி தான் 23 வயதே ஆன அப்துல்லா ஷபீக்கிற்கு உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டி. அதில் அப்துல்லா ஷபீக் உலகக் கோப்பையின் தனது முதல் போட்டியிலேயே அறிமுக சதத்தை அடித்தார்.
103 பந்துகள் களத்தில் நின்ற அவர், இலங்கை அணியினரின் பந்துகளை பறக்கவிட்டார். இவ்வாறு 3 சிக்ஸர்கள் மற்றும் 10 பவுண்டரிகள் விளாசினார்.
அந்தவகையில் அவர் மொத்தம் 113 ரன்கள் குவித்தார். சதம் அடிக்க 97 பந்துகளே எடுத்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், 345 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது விளையாடி வரும் பாகிஸ்தான் அணி 45 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 315 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
மேலும் படிக்க: Sri Lanka vs Pakistan LIVE: கைவிட்டுப் போகும் ஆட்டம்.. வெற்றியை நெருங்கும் பாகிஸ்தான்; சொதப்பும் பத்திரானா..