உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரும் தென்னாப்பிரிக்க அணியின் முன்னால் கேப்டனுமாகியவர் ஏபி டிவிலியர்ஸ். கிரிக்கெட்டின் 360 டிகிரி என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் டிவிலியர்ஸ் களத்தில் அனைத்து திசைகளிலும் விதவிதமான ஷாட்கள் மூலம் பந்துகளை சிக்ஸருக்கு விரட்டும் ஆற்றல் பெற்றவர்.






இந்த நிலையில், அனைத்து வடிவ கிரிக்கெட்டில் இருந்தும் ஏபி டிவிலியர்ஸ் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள டிவிலியர்ஸ், இது ஒரு நம்ப முடியாத பயணம். ஆனால், நான் அனைத்து கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். எனது மூத்த சகோதரர்களுடன் விளையாடத் தொடங்கியது முதல் நான் முழு மகிழ்ச்சியுடனும், கட்டுக்கடங்காத உற்சாகத்துடனும் விளையாட்டை விளையாடினேன். இப்போது, 37 வயதில் அந்தச்சுடர் அவ்வளது பிரகாசமாக எரியவில்லை.”


இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.




சில கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டுமே அவர்களது சொந்த அணிகளை கடந்து பல நாட்டு ரசிகர்களும் ரசிகர்களாக இருப்பார்கள். அந்த வரிசையில் டிவிலியர்சின் அதிரடிக்காகவே பல நாடுகளிலும் அவருக்கு ரசிகர்கள் உள்ளனர். ஏபிடி என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் ஆப்ரகாம் டிவிலியர்ஸ் 1984ம் ஆண்டு பிப்ரவரி 17-ந் தேதி பிறந்தவர். அவர் முதன்முறையாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 2004ம் ஆண்டு அறிமுகமானார். 2004ம் ஆண்டு இங்கிலாந்திற்கு எதிராக செயின்ட்ஸ் ஜார்ஜ் பார்க்கில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் டிவிலியர்ஸ் அறிமுகமானார்.


ஒருநாள் போட்டிகளில் 2005ம் ஆண்டு இங்கிலாந்திற்கு எதிராக பிப்ரவரி 2-ந் தேதி மாங்குவாங் ஓவலில் நடைபெற்ற போட்டியில் அறிமுகமானார். டி20 போட்டிகளில் 2006ம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிராக வான்டரெர்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் அறிமுகமானார்.




அதிரடி பேட்ஸ்மேனான டிவிலியர்ஸ் இதுவரை 114 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 8 ஆயிரத்து 765 ரன்களை குவித்துள்ளார். அவற்றில் 22 சதங்களும், 46 அரைசதங்களும், 2 இரட்டை சதங்களும் அடங்கும். டெஸ்ட் போட்டிகளில் அதிகபட்சமாக 278 ரன்களை குவித்துள்ளார். அதேபோல, 228 போட்டிகளில் ஆடி 9 ஆயிரத்து 577 ரன்களை குவித்துள்ளார். அவற்றில் 25 சதங்களும், 53 அரைசதங்களும் அடங்கும். அதிகபட்சமாக 176 ரன்களை குவித்துள்ளார். தென்னாப்பிரக்க அணிக்காக 78 டி20 போட்டிகளில் ஆடியுள்ள டிவிலியர்ஸ் 1,672 ரன்களை குவித்துள்ளார். அவற்றில் 10 அரைசதங்கள் அடங்கும்.


ஏபி டிவிலியர்ஸ் பல்வேறு நாட்டு லீக் போட்டிகளில் ஆடினாலும் ஐ.பி.எல். போட்டியில் பெங்களூர் அணியின் தூணாகவே அவர் வலம்வந்தார். கிறிஸ் கெயிலா? டிவிலியர்சா? என்ற நிலை வந்தபோது பெங்களூர் நிர்வாகம் டிவிலியர்சையே தேர்வு செய்தது. அவர் இதுவரை 184 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 5 ஆயிரத்து 162 ரன்களை குவித்துள்ளார். அவற்றில் 3 சதங்களும், 40 அரைசதங்களும் அடங்கும். அதிகபட்சமாக 133 ரன்களை குவித்துள்ளார்.




டிவிலியர்ஸ் தனது கடைசி டெஸ்ட் போட்டியை 2018ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஆடியிருந்தார். கடைசி ஒருநாள் போட்டியை 2018ம் ஆண்டு பிப்ரவரி 16-ந் தேதி இந்தியாவிற்கு எதிராக ஆடியிருந்தார். தனது கடைசி டி20 போட்டியை வங்கதேசத்திற்கு எதிராக 2017ம் ஆண்டு அக்டோபர் 29-ந் தேதி ஆடியிருந்தார்.


ஐ.பி.எல். போட்டிகளில் 2008ம் ஆண்டு சென்னைக்கு எதிராக அறிமுகமான டிவிலியர்ஸ், நடப்பாண்டு அக்டோபர் 11-ந் தேதி கொல்கத்தாவிற்கு எதிராக தனது கடைசி போட்டியில் ஆடினார். டிவிலியர்ஸ் அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்திருப்பது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண