கடந்த ஆண்டு செப்டம்பரில் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆரோன் ஃபின்ச் அறிவித்தார். அப்போதிலிருந்து, பின்ச், சர்வதேச கிரிக்கெட்டில் எவ்வளவு காலம் விளையாடுவார் என்று சமூக வலைத்தளங்களில் ஆஸ்திரேலியா ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்தநிலையில், ஆஸ்திரேலிய கேப்டன் ஃபின்ஸ் அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்தார். இவரது தலைமையிலான ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி கடந்த 2021 டி20 உலகக் கோப்பை வென்றது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், 2015 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணி ஒருநாள் உலகக் கோப்பையை வென்றபோது, அணியில் ஃபின்ச்சின் பங்கு மறக்க முடியாது. தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தும் திறன் கொண்ட ஃபின்ச், தனது 12 ஆண்டு கால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் 5 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார்.
தனது ஓய்வு குறித்து பேசிய ஃபின்ச், “2024 டி20 உலகக் கோப்பை வரை என்னால் தொடர்ந்து விளையாட முடியாது. எனவே தேசிய அணியை விட்டு வெளியேற இதுவே சிறந்த தருணம். இப்போது ஓய்வு பெறுவது அணிக்கு அந்த உலகக் கோப்பைக்குத் தயாராகிக் கொள்ள போதிய கால அவகாசம் தரும். எனக்கு எப்போதும் உறுதுணையாக இருந்த ஆஸ்திரேலிய வீரர்கள், எனது அணி, குடும்பத்தினர் மற்றும் மனைவி ஆகியோருக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அதே நேரத்தில் ரசிகர்களுக்கும் எனது இதயத்தின் அடிப்பகுதியில் இருந்து நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 2021ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையையும், 2015ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையையும் வெல்வது எனது வாழ்க்கையின் சிறந்த நினைவுகளாக இருக்கும். எனது சர்வதேச வாழ்க்கை முழுவதும் எனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் மிக்க நன்றி.” என தெரிவித்தார்.
ஆரோன் பின்ச்:
ஃபின்ச் ஆஸ்திரேலியா அணிக்காக மொத்தம் 76 டி20 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்துள்ளார். இது ஒரு உலக சாதனையாகும். முன்னாள் இந்திய அணியின் கேப்டன் எம்.எஸ். தோனி 72 டி20 போட்டிகளில் தலைமை தாங்கி இரண்டாவது இடத்தில் உள்ளார்.
ஆஸ்திரேலியா அணி முதல்முறையாக இவரது தலைமையில்தான் டி20 உலகக் கோப்பையை வென்றது. 2021-ல் அறிமுகமான பிறகு, ஃபின்ச் மொத்தம் 8804 சர்வதேச ரன்களை எடுத்துள்ளார். அவர் 146 ஒருநாள் போட்டிகளில் 38.89 சராசரியில் 17 சதங்கள் உட்பட மொத்தம் 5406 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், 103 டி20 சர்வதேச போட்டிகளில் 34.29 சராசரியுடன் 2 சதங்கள் உட்பட 3120 ரன்கள் எடுத்துள்ளார்.
ஆஸ்திரேலியா அணிக்காக 5 டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடியுள்ள ஃபின்ச், 10 இன்னிங்ஸ்களில் 27.08 சராசரியில் 278 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார், அதில் 2 அரை சதங்கள் மட்டுமே அடிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்காக ஃபின்ச் கடைசி போட்டியில் அயர்லாந்துக்கு எதிராக 63 ரன்கள் எடுத்தார். அணியும் வெற்றி பெறும். இருப்பினும், சொந்த மண்ணில் நடந்த உலகக் கோப்பையின் அரையிறுதிக்கு இவரது தலைமையிலான அணி செல்லவில்லை.
கடந்த 2018 இல் ஜிம்பாப்வேக்கு எதிராக ஃபின்ச் 76 பந்துகளில் 172 ரன்கள் எடுத்தது டி20 சர்வதேசப் போட்டிகளில் இதுவரை இல்லாத அதிகபட்ச ஸ்கோராகும்.