இந்திய கிரிக்கெட் அணி அடுத்து வாரம் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் செல்ல உள்ளது. இதற்கான இந்திய அணி இன்னும் சற்று நேரத்தில் அறிவிக்கப்பட உள்ளது. இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுடன் 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி பாக்சிங் டே டெஸ்ட் போட்டியாக நடைபெற உள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அடுத்த நாள் இந்தப் போட்டி தொடங்க உள்ளது. 


இந்நிலையில் 6 ஆண்டுகளுக்கு முன்பாக இதேநாளில் தென்னாப்பிரிக்க அணியை இந்திய அணி துவம்சம் செய்ததை சற்று திரும்பி பார்ப்போம். 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ஆம் தேதி டெல்லியில் இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி ரஹானேவின்(127) சிறப்பான சதத்தால் 334 ரன்கள் குவித்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி இந்திய அணியின் சுழற்பந்துவீச்சை சமாளிக்க தடுமாறியது. இதனால் 121 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ஜடேஜா 5 விக்கெட்டும், அஸ்வின் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். 




அதன்பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணியில் மீண்டும் ரஹானே 100*, கோலி 88 ரன்கள் அடித்து 265 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்திய அணி தென்னாப்பிரிக்க வெற்றி பெற 481 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இரண்டாவது இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணியின் பவுமா 34(117), ஹசிம் ஆம்லா 25(244), டிவில்லியர்ஸ் 43(297), டூபிளசிஸ் 10(97) என நீண்ட நேரம் தாக்கு பிடித்தனர். 


குறிப்பாக ஐந்தாவது நாளின் தேநீர் இடைவேளையின் போது தென்னாப்பிரிக்க அணி 5 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்திருந்தது. அத்துடன் தென்னாப்பிரிக்க அணி 138 ஓவர்கள் வரை பேட்டிங் செய்து போட்டியை டிரா செய்ய முயன்றது. எனினும் கடைசி செஷனில் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சிறப்பாக பந்துவீசினார். இவர் 61 ரன்கள் விட்டு கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தி இந்திய அணியை வெற்றி பெற செய்தார். இந்திய அணி 337 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. மேலும் அந்தத் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்றது. அந்தத் தொடர் முழுவதும் 31 விக்கெட்கள் மற்றும் 101 ரன்கள் ஆகியவை எடுத்து அஸ்வின் தொடர் நாயகன் விருதை வென்று அசத்தினார். 




இவ்வாறு ஆறு ஆண்டுகளுக்கு முன்பாக இந்திய அணி சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்க அணியை துவம்சம் செய்தது. அதேபோல் இதுவரை தென்னாப்பிரிக்க மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றதில்லை. ஆகவே இந்த முறை இந்திய அணி நன்றாக விளையாடி முதல் முறையாக தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை வெல்லுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 


மேலும் படிக்க: யாருயா இவரு.. பில்லி பவுடனுக்கே டஃப் கொடுக்கும் நம்ம ஊரு நடுவர்.. வைரல் வீடியோ!