Ruturaj Gaikwad: ஒரே ஓவரில் 7 சிக்ஸர் அடித்து சாதனை படைத்ததுடன் ருதுராஜ் கெய்க்வாட் படைத்த சாதனைகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். 


2022ஆம் ஆண்டுக்கான விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரின் இரண்டாவது கால் இறுதிப் போட்டி நேற்று நடந்தது. அதில் மகாராஸ்ட்ரா அணியும் உத்திரப் பிரதேச அணியும் மோதிக் கொண்டன. அதில் முதலில் பேட்டிங் செய்த மகாராஸ்ட்ரா அணி 50 ஓவர்கள் முடிவில் 330 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருத்ராஜ் கெய்க்வாட் 159 பந்துகளில் 220 ரன்கள் குவித்தார். குறிப்பாக போட்டியின் 49 ஓவரில் வீசப்பட்ட ஒரு நோ-பாலுடன் சேர்த்து 7 சிக்ஸர்கள் பறக்கவிட்டு ருத்ரதாண்டவமாடினார். 


இரட்டைச் சதம், ஒரே ஓவரில் 7 சிக்ஸர் என இதனுடன் மொத்தம் 5 சாதனைகளை அவர் முறியடித்துள்ளார். 


1. மகராஸ்ட்ரா அணிக்காக அவர் அடித்த முதல் இரட்டைச் சதம். இரட்டைச் சதம் அடிக்கும் 14வது இந்தியர் இவர். 


2. ஒரே ஓவரில் 7 சிக்ஸர் பறக்கவிட்ட முதல் வீரர் இவர் தான். 


3. ஒரே ஓவரில் அதிக ரன்கள் அடித்தவர் இவர் தான். இதற்கு முன்னர் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்கள் அடித்து 36 ரன்கள் அடித்ததே அதிக ரன்களாக இருந்தது. ஆனால் நேற்று நடந்த போட்டியில் ருத்ராஜ் அடித்த 7 சிக்ஸர் மூலம் ஒரே ஓவரில் அதிக ரன்கள் அதாவது 42 ரன்கள் குவித்த வீரர் என்றால் அது இவர் தான். 






4. விஜய் ஹசாரே கோப்பைக் கிரிக்கெட்டில் ஒரு அணி ஒரே ஓவரில் அதிக ரன்கள் எடுத்திருப்பதும் இந்த போட்டியில் தான். 49 ஓவரில் வீசப்பட்ட ஒரு நோ-பால், அடிக்கப்பட்ட 7 சிக்ஸர் என மொத்தம் 43 ரன்கள் குவிக்கப்பட்டுள்ளது. 


5. ஒரே போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற பெருமையை ரோகித் ஷர்மாவுடன் ருதுராஜ் பகிர்ந்து கொள்கிறார். அவர் இந்த போட்டியில் 16 சிக்ஸர்கள் பறக்கவிட்டிருந்தார். ரோகித் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2013ஆம் ஆண்டு அடித்த இரட்டைச் சதத்தின் போது 16 சிக்ஸர்கள் பறக்கவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இந்த போட்டியில் மகாராஸ்ட்ரா அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.