சிக்சரை நெருங்கிய பந்தை அநாயசமாக வானில் பறந்து இரண்டு வீரர்கள் சேர்ந்து கேட்ச் பிடித்தது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
வைரலாகும் வீடியோ:
catches win matches என கிரிக்கெட் உலகில் ஒரு பழமொழி உண்டு. அந்த வகையில் பிடிக்கப்பட்ட ஒரு அற்புதமான கேட்ச் தொடர்பான வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகியுள்ளது. ஐரோப்பியன் கிரிக்கெட் லீக் டி-10 தொடரின் லீக் போட்டியில் தான், காண்போரை பிரமிக்க செய்யும் வகையில் கேட்ச் பிடிக்கப்பட்டுள்ளது.
குவாலிபையர்-1 போட்டி:
தொடரின் முதல் குவாலிபையர் போட்டியில் ட்ரூக்ஸ் மற்றும் CIYMS ஆகிய அணிகள் மோதின. போட்டியில் முதலில் பேட்டிங் செய்த CIYMS அணி, 10 ஓவர்கள் முடிவில் 125 ரன்களை சேர்த்தது. தொடர்ந்து இலக்கை நோக்கி களமிறங்கிய ட்ரூக்ஸ் அணி அதிரடியாக விளையாடி வந்தது. 3.3 ஓவரில் ஒருவிக்கெட்டை இழந்து 42 ரன்களை அந்த அணி எடுத்தது. அப்போது, கென்னடி எனும் வீரர் வீசிய ஓவரின் நான்காவது பந்தை, ட்ரூக்ஸ் அணியை சேர்ந்த நபி தூக்கி அடித்தார்.
அசாத்தியமான கேட்ச்:
நபி அடித்த பந்து வானில் பறந்து சிக்சர் எல்லையை நெருங்கிய நிலையில், அங்கு நின்று கொண்டிருந்த ஜேசன் வான் டெர் மெர்வே அநாயசமாக அந்தரத்தில் பறந்து ஒரே கையால் பந்தை கேட்ச் பிடித்தார். ஆனால், நிலைதடுமாறி கீழே விழவிருந்த நிலையில், நொடிப்பொழுதில் சுதாரித்த அவர் பந்தை மீண்டும் மேலே தூக்கிப்போட்டார். அப்போது அவருக்கு அருகே நின்று கொண்டிருந்த சக வீரரான ஜேக்கப் முல்டர் பந்தை கேட்ச் பிடித்து அசத்தினார். இதன் மூலம், அதிரடியாக விளையாடி 9 பந்துகளில் 28 ரன்கள் சேர்த்து இருந்த நபி, 10வது பந்தில் ஆட்டமிழந்தார். தற்போது, ஜேசன் வான் டெர் மெர்வே மற்றும் ஜேக்கப் முல்டர் ஆகியோர் சேர்ந்து பிடித்த கேட்ச் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. இதனிடையே இந்த போட்டியில், ட்ரூக்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.