பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மிகச்சிறந்த கிரிக்கெட் அணியாக இருந்தாலும் சர்ச்சைகளும், சிக்கல்களும் அந்த நாட்டு கிரிக்கெட்டை பல காலமாக தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது. பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு இன்று வரை ஒரு கரும்புள்ளியாக இருந்து வருவது அந்த நாட்டு கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக பொறுப்பு வகித்து பாப் உல்மரின் மரணம்.


மேற்கிந்திய தீவில் 2007ம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலககோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு பயிற்சியாளராக பொறுப்பு வகித்த பாப் உல்மர் மர்மமான முறையில் ஹோட்டலில் அவர் தங்கியிருந்த அறையில் பாத்ரூமில் உயிரிழந்து கிடந்தார். இன்றுடன் பாப் உல்மர் உயிரிழந்து 15 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. ஆனாலும், இன்று வரை பாப் உல்மரின் மரணம் என்பது ஒரு மர்மமாகவே இருந்து வருகிறது.




2007ம் ஆண்டு இன்ஜமாம் உல் ஹக் தலைமையில் உலககோப்பை தொடருக்கு விளையாட வந்த பாகிஸ்தான் அணிக்கு பயிற்சியாளராக பாப் உல்மர் பொறுப்பேற்றார். தொடரின் முதல் போட்டியிலே பாகிஸ்தான் அணி மேற்கிந்திய தீவுகள் அணியை எதிர்கொண்டது. முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.


இதையடுத்து, மார்ச் 17, 2007-ல் அயர்லாந்து அணியுடன் பாகிஸ்தான் அணி விளையாடியது. இந்த போட்டியில் மிகவும் எளிதாக பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுவிடும் என்று எதிர்பார்த்த அனைத்து ரசிகர்களுக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. இந்த போட்டியில் முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 45.4 ஓவர்களில் 132 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இம்ரான் நசீர், முகமது யூசுப், கம்ரான் அக்மல், முகமது ஷமி ஆகிய நான்கு பேர் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை எடுத்தனர். அதிகபட்சமாக கம்ரான் அக்மல் 27 ரன்கள் எடுத்தார்.




இதையடுத்து, 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணி ஓ பிரையனின் அபார ஆட்டத்தால் 41.4 ஓவர்களில் 133 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த அதிர்ச்சித் தோல்வி பாகிஸ்தான் ரசிகர்களை கொந்தளிக்க வைத்தது. போட்டி முடிந்தவுடன் சோகத்துடன் பாகிஸ்தான் அணி அவரவர் அறைக்குச் சென்றனர்.


ஆனால், தோல்வி அதிர்ச்சியில் இருந்து அவர்கள் மீள்வதற்கு முன்பாக பாகிஸ்தான் அணிக்கு மற்றொரு பேரதிர்ச்சி காத்திருந்தது. ஹோட்டல் அறையில் தங்கியிருந்த பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் பாப் உல்மர் அவரது அறையில் இருந்த குளியலறையில் உயிரிழந்து கிடந்தார். வெஸ்ட் இண்டீஸ் நாட்டு போலீசார் தீவிர விசாரணைக்கு பிறகு பாப் உல்மர் இயற்கையாகவே உயிரிழந்தார் என்று கூறப்பட்டது.




இருப்பினும் அவரது மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்களும், மர்மங்களும் இன்றளவும் நீடித்து வருகிறது. பாப் உல்மர் ஒரு புத்தகத்தை எழுத திட்டமிட்டிருந்ததாகவும், அந்த புத்தகத்தில் மேட்ச் – புக்கிங் தொடர்பாகவும், சூதாட்ட புரோக்கர்கள் தொடர்பாகவும், பாகிஸ்தான் வீரர்களின் சூதாட்ட உண்மை நிலவரங்கள் குறித்தும் எழுத திட்டமிட்டிருந்ததாகவும், இந்த காரணத்தினாலே அவர் கொல்லப்பட்டதாகவும் சில கருத்துக்களும் இப்போது வரை உள்ளது. அவரது மரணத்தில் பாகிஸ்தான் அணியின் முக்கிய வீரர்கள் பலருக்கும் தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.


இங்கிலாந்தைச் சேர்ந்த பாப் உல்மர் 19 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 1,059 ரன்கள் எடுத்துள்ளார். அவற்றில் 3 சதங்களும், 2 அரைசதங்களும் அடங்கும். 6 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ளார். டெஸ்டில் 4 விக்கெட்டும், ஒருநாள் போட்டியில் 9 விக்கெட்டும் கைப்பற்றியுள்ளார். 2004ம் ஆண்டு முதல் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக பொறுப்பு வகித்தவர் 2007ம் ஆண்டு இதே நாளில் உயிரிழந்தார்.