சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பல்வேறு டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளன. அவற்றில் மிகவும் வரலாற்று சிறப்பு மிக்க டெஸ்ட் போட்டிகளில் ஒன்று 2008ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் போட்டி. இந்த டெஸ்ட் போட்டி அந்தாண்டு டிசம்பர் மாதம் 11-15 தேதி வரை நடைபெற்றது. இதில் கடைசி நாளில் இந்திய அணி சாதனை வெற்றி பெற்றது. அத்துடன் இந்த டெஸ்ட் போட்டி வரலாற்று புத்தகங்களில் இடம்பிடித்தது. எதற்காக வரலாற்றில் இந்த டெஸ்ட் இடம்பிடித்தது தெரியுமா?


2008ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் தோனி தலைமையிலான இந்திய அணி கேவின் பீட்டர்சன் தலைமையிலான இங்கிலாந்து அணியை எதிர்த்து விளையாடியது. இப்போட்டியில் முதலில் ஆடிய இங்கிலாந்து அணி ஆண்ட்ரூ ஸ்ட்ராஸின்(123) சதத்தால் 316 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் இந்திய அணியில் கேப்டன் தோனி மட்டும் அரைசதம் கடந்தார். மற்ற வீரர்கள் பெரிதாக ரன்கள் எடுக்கவில்லை. இதனால் இந்திய அணி 241 ரன்களுக்கு சுருண்டது. 




சற்று குறைந்த முதல் இன்னிங்ஸ் முன்னிலையுடன் இங்கிலாந்து அணி 2ஆவது இன்னிங்ஸை தொடர்ந்தது. அதிலும் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ்(108) மற்றும் காலிங்வூட்(108) சதம் கடந்தனர். இவர்களை தவிர மற்ற இங்கிலாந்து வீரர்கள் சொதப்பினர். இறுதியில் இங்கிலாந்து அணி நான்காம் நாள் தேநீர் இடைவேளைக்கு பிறகு 9 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டத்தை டிக்ளேர் செய்தது. இந்திய அணி 387 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. அதிலும் குறிப்பாக சரியாக ஒரே ஒருநாள் ஆட்டம் மட்டுமே மீதியிருந்தது. ஆகவே இந்தப் போட்டி டிரா அல்லது இங்கிலாந்து வெற்றி பெற வாய்ப்பு அதிகம் என்று கூறப்பட்டது. 


அப்போது களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் வீரேந்திர சேவாக் மற்றும் கவுதம் காம்பீர் அதிரடி தொடக்கமளித்தனர். குறிப்பாக சேவாக் 4 சிக்சர்கள் மற்றும் 11 பவுண்டரிகளுடன் 68 பந்துகளில் 83 ரன்கள் விளாசினார். அவரின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி 108 பந்துகளில் 100 ரன்களை கடந்தது. 83 ரன்கள் எடுத்திருந்த போது சேவாக் ஆட்டமிழந்தார். நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்திருந்தது. 




கடைசி நாளில் இந்திய அணி வெற்றி பெற 256 ரன்கள் தேவைப்பட்டது. ஐந்தாவது நாள் ஆட்டத்தில் காம்பீர்(66),டிராவிட்(4),லக்‌ஷ்மண்(26) என தொடர்ந்து வரிசையாக ஆட்டமிழந்தனர். இதன்பின்னர் ஜோடி சேர்ந்த சச்சின் டெண்டுல்கர் மற்றும் யுவராஜ் சிங் இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் தொடக்கத்தில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதன்பின்பு இருவரும் வேகமாக ரன்களை சேர்த்தனர். சச்சின்-யுவராஜ் ஜோடி 5ஆவது விக்கெட்டிற்கு 162 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது. சச்சின் டெண்டுல்கர்(103*), யுவராஜ் சிங்(85*) என இருவரும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.




இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில்  நான்காவது இன்னிங்ஸில் அதிகமான சேஸ் செய்த அணிகள் பட்டியலில் இந்தியா நான்காவது இடத்தை பிடித்தது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சேஸ் செய்யப்பட்ட நான்காவது அதிகமான ஸ்கோராக இது தற்போது வரை இருந்து வருகிறது. இந்த வரலாறு சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு எப்போதும் பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. அதிலும் தல தோனி தலைமையிலான அணி இந்த சாதனையை சென்னையில் படைத்தது பெரும் மகிழ்ச்சியான ஒன்று. 


மேலும் படிக்க: ’கனவு நனவாகும்’ - சொந்த கிராமத்தில் கிரிக்கெட் மைதானம் தொடங்கிய நடராஜன்..