கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியதால், நடராஜன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இடம்பெற்றார். அதுவும் நெட் பவுலராக... ஆனால், சில வீரர்களுக்கு காயம் ஏற்பட்டதால், அவருக்கு T20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்டார் நடராஜன். மேலும், ஒரே சுற்றுப்பயணத்தில் மூன்று வடிவிலான கிரிக்கெட்டில் அறிமுகமான ஒரே வீரர் என்ற சாதனையையும் நடராஜன் படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சரியாக ஓராண்டுக்கு பிறகு தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியில் ஒரு கிரிக்கெட் மைதானத்தை திறந்திருப்பது பற்றிய செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். இது குறித்து அவர் பதிவிட்டிருப்பதாவது, “அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய கிரிக்கெட் மைதானத்தை என்னுடைய சொந்த கிராமத்தில் திறப்பது பற்றிய செய்தியை உங்களிடம் பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த மைதானத்திற்கு ‘நடராஜன் கிரிக்கெட் கிரவுண்ட்’ என பெயரிட்டுள்ளோம். கனவுகள் மெய்ப்படுகின்றது. இதே மாதம் கடந்த ஆண்டு இந்திய அணியில் அறிமுகமானேன். இந்த ஆண்டு கிரிக்கெட் மைதானத்தை நிறுவி இருக்கின்றேன்” என பகிர்ந்திருக்கிறார்.
இந்த ஆண்டு, கொரோனா பரவல் காரணமாக ஐபிஎல் தொடர் இரண்டு கட்டங்களாக நடந்து முடிந்தது. ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கிய இரண்டாவது பாதியில் நடராஜன் பங்கேற்கவில்லை. சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடிய நடராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதியில் இருந்து விலகினார் அவர்.
அதனை தொடர்ந்து, தமிழ்நாடும் கர்நாடகாவும் மோதிய சையத் முஷ்தாக் அலி டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் தமிழ்நாடு கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது. இந்த அணியில் நடராஜன் இடம் பிடித்திருந்தார். ஆனால், சையத் முஸ்தாக் அலி கோப்பையில் விளையாடிய நடராஜன் இந்த ஆண்டுக்கான விஜய் ஹசரே தொடருக்கான தமிழ்நாடு அணியில் இடம் பிடிக்கவில்லை.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்