ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டேவிட் வார்னர் கேப்டன்ஷிப் செய்வதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியானது.
வார்னருக்கு தடை:
கடந்த 2018ம் ஆண்டு கேப்டவுனில் நடைபெற்ற தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் டேவிட் வார்னர் உப்புக்காகிதத்தை வைத்து பந்தை சேதப்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அணியை வழி நடத்துவதில் இருந்து வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. இந்த சமயத்தில் பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித், துணை கேப்டன் வார்னர் மற்றும் ஓப்பனர் கேமரோன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதில் கேமரோனுக்கு 9 மாதமும், ஸ்மித் மற்றும் வார்னருக்கு சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளில் விளையாட 12 மாதங்களுக்கு தடையும், ஸ்மித்துக்கு 12 மாதங்களுக்கு கேப்டன்ஸி செய்யவும் தடை விதிக்கப்பட்டது.
அசத்திய வார்னர் & ஸ்மித்:
தடைகளுக்குப் பிறகு ஸ்மித் மற்றும் வார்னர் இருவரும் களத்திற்கு வர ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் பலமாக அமைந்தது. 2019ல் நடைபெற்ற உலகக் கோப்பையில் வார்னர் 600க்கும் மேற்பட்ட ரன்களை விளாசினார். அதே போல ஸ்மித்தும் ஆஷஷ் தொடரில் சிறப்பாக பேட்டிங் செய்து அசத்தினார்.
தடை நீக்க பரிசீலனையில் நிர்வாகம்:
இந்த நிலையில், வார்னருக்கு கேப்டன்ஷிப் செய்ய விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை நீக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த செய்தியாளர் பென் வெளியிட்டுள்ள தகவல்படி ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் துணை கேப்டன் வார்னர் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்க பரிசீலித்து வருவதாக தெரிவித்துள்ளார். 35 வயதாகும் வார்னருக்கு கேப்டன்ஷிப்பில் ஆர்வமிருப்பதை அறிந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் தடையை நீக்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. சர்வதேசப் போட்டிகளில் தான் வார்னரால் கேப்டன்ஷிப் செய்ய முடியவில்லையே தவிர, கடந்த தொடர்வரை ஐபிஎல் கிரிக்கெட்டில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை டேவிட் வார்னர் வழிநடத்தினார். அதோடு, 2021 உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற காரணமாக இருந்தவர்களில் வார்னர் ஒருவராக இருந்தார். இதுபோன்றவற்றை கருத்தில் கொண்டு வார்னர் மீதான தடையை நீக்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் அவர் மீது தடையை நீக்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கேப்டனாகிறாரா வார்னர்?:
ஆஸ்திரேலிய அணியின் துணை கேப்டன் பதவியில் வசித்து வந்த வார்னர், தடை நீக்கப்பட்டால் அந்த அணியின் கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.