திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு பகுதியை சேர்ந்தவர் ஷேக், அதே பகுதியை சேர்ந்த முனி ஆகிய இவருக்கும் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இதனைத் தொடர்ந்து, கர்ப்பமான முனிக்கு திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சில நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தை குறை மாதத்தில் பிறந்துள்ளது. அந்த குழந்தை ஒரு கிலோ எடை மட்டுமே இருந்தது. வழக்கமாக ஒரு குழந்தை 36-ல் இருந்து 40 வாரங்களுக்குள் பிறக்கும் குழந்தை குறைந்தது 3 கிலோ எடை இருக்கும். ஆனால் இந்த குழந்தை 29 வாரத்தில் பிறந்ததால் உடற்பாகங்கள் முழுமையாக வளர்ச்சி அடையாமல் 1 கிலோ எடை மட்டுமே இருந்துள்ளது. இதனால் குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் குழந்தையின் எடை குறைவாக இருப்பதால் அதற்குரிய நோய் எதிர்ப்பு சக்தி, உடல் உறுப்புகள் வளர்ச்சி குறைந்து நோய் தொற்று ஏற்படும் நிலை ஏற்பட்டது. 


 




 


அதனைத்தொடர்ந்து குழந்தைகள் சிறப்பு மருத்துவர் பெருமாள் பிள்ளை, மயக்கவியல் மருத்துவ இணை பேராசிரியர் சரவணகுமார் மற்றும் மருத்துவர்கள் பாபு, சீனிவாசன் ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர் குழந்தைக்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்து சிகிச்சையை தொடங்கினர். முதல் கட்டமாக குழந்தையின் இதயத்துக்கு செல்லும் பெரிய ரத்த குழாயில் டியூப் பொருத்தினால் தான் சிகிச்சையை தொடங்க முடியும் என்பதால், அதற்காக அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் உதவியுடன் ரத்த குழாயை கண்டறிந்து குழந்தையின் உடலில் ஊசி மூலம் டியூப் பொருத்தும் பணி வெற்றிகரமாக செலுத்தி குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இத்தகைய குழந்தைக்கு அதிநவீன வசதி கொண்ட குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவமனை மற்றும் அதிநவீன வசதிகள் கொண்ட சிறப்பு மருத்துவமனையில் மட்டுமே சிகிச்சை அளிக்க முடியும் என்றனர். 


 


 




இத்தகைய சிகிச்சையை திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ குழுவினர் மேற்கொண்டு சாதனை செய்துள்ளனர். குழந்தை 24 மணி நேர மருத்துவ குழுவினரின் கண்காணிப்பில் உள்ளது. குழந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் குழுவினர் கூறுகையில், 'பொதுவாக குறைந்த எடை கொண்ட குழந்தைகளை குணமாக்குவது சவாலான செயல். நமது மருத்துவமனையில் குறைமாத குழந்தை பராமரிப்பு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தற்போது இந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்க டியூப் பொருத்தப்பட்டுள்ளது. கடந்த 25 ஆண்டுகளில் தேசிய அளவில் இதுபோன்ற நிகழ்வு நடந்ததாக சான்று இல்லை. திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இதுபோன்ற சிகிச்சை முதல் முறையாக வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்றனர். மேலும் குழந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவ குழுவினரை மருத்துவ கல்லூரி டீன் திருமால் பாபு, மருத்துவர்கள் பாராட்டி வருகின்றனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண