#CSKvRCB – India trends No:1


ஏப்ரல் 25-ம் தேதி, காலை முதல் இந்திய அளவில், ட்விட்டரில் டிரெண்டான ஹேஷ்டேக்
இது.


கொரோனா பரவல் தொடர்பான பிரச்னைகளும் சிக்கல்களும் இந்திய அளவில்
ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமாக இருந்தாலும், ஐபிஎல் தொடரின் இரண்டு
முக்கிய அணிகள், அதிக ரசிகர்களை கொண்ட இரு அணிகள், இந்த சீசனில் தற்போது
புள்ளி பட்டியலில் டாப் இடத்தில் இருக்கும் அணிகள் மோதிக் கொண்ட இந்த
போட்டியை காண அத்தனை எதிர்பார்ப்புகள், காத்திருப்புகள் ஏன்?!


சரி, இந்த ஹேஷ்டேக் டிரெண்டை பற்றி நாம் அலசுவதற்கு முன்பு, மற்றுமொரு தகவலை
பார்ப்போம்.




“இந்தியாவின் கோவிட் எண்ணிக்கை அச்சமூட்டுகிறது. ஆனால், ஐபிஎல் தொடர்கிறது.
இந்த நேரத்தில் நடத்துவது சரியா? அல்லது ஒவ்வொரு இரவும் பொழுதுபோக்காக
மக்களுக்கு இது தேவையானது தானா? எதுவாக இருந்தாலும், என்னுடைய
எண்ணங்களும் பிரார்த்தனைகளும் இந்தியர்களுடன்..” என முன்னாள் ஆஸ்திரேலிய
அணி வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்திருந்தார்.
கில்கிறிஸ்ட்டின் இந்த கேள்விக்கு, இந்த நேரத்தில் ஐபிஎல் தேவையில்லை என்றும்,
கொரோனாவால் ஏற்பட்டு வரும் சிக்கல்களையும் இதையும் இணைத்து பேச முடியாது
என்றும் சமூக வலைதளத்தில் கருத்துக்கள் பகிரப்படுகிறது.


இரு தரப்பு சரிகளையும், தவறுகளையும் அலசி ஆராய வேண்டுமெனில் பலவற்றை
கருத்தில் எடுத்துக் கொண்டுதான் ஒரு முடிவுக்கு வர முடியும். ஆனால், அதற்கு முன்பு
இந்தியர்களுக்கு கிரிக்கெட்டின் மீது இருக்கும் காதலை முதலில் புரிந்து கொள்ள
வேண்டியது மிக அவசியம்.





தற்போதையை நிலையை பற்றி மனதளவில் கவலைப்படாமல் இருப்பவர்கள் யாரும்
இருக்க முடியாது. ஒவ்வொருவரும் நாட்டின் மற்ற பகுதிகளில் நடந்துக்
கொண்டிருப்பதையும், தங்களுக்கு நெருக்கமான வட்டாரத்தில் நடந்து
கொண்டிருப்பதையும் கவனித்துக் கொண்டு, இயன்ற வரையில் ஒருவருக்கு ஒருவர்
ஆதரவு கொடுத்து கொண்டிருக்கின்றனர்.


ஆனால், காலையில் நாட்டு நடப்புகளை பற்றி அதிருப்தியான பதிவுகள் பகிர்ந்துவிட்டு,
மாலை ஐபிஎல் பார்ப்பதெல்லாம் என்ன மனநிலையோ என்று என்னிடம் பலர் கேள்வி
எழுப்பி உள்ளனர். இதே கேள்வியை நீங்களும் எதிர்கொண்டிருக்கலாம்.
இந்த சீசனில், நூறு சதவிகிதம் ஐபிஎல் தொடரை ரசிக்க முடியாமல் இருந்தாலும். தினம்
தினம் கேட்டு, பார்த்துக் கொண்டிருக்கும் கொரோனா மனநிலையை மறந்து சற்று
மாற்றத்தை தருவதாகவே ஐபிஎல் இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.
இந்த சீசனில் பங்கேற்றிருக்கும் அனைத்து அணி நிர்வாகமும், பயோ பபுளில் இருக்கும்
கிரிக்கெட்டர்களை கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தச் சொல்லி பதிவுகளை
தொடர்ந்து பதிவிட்டு வருகின்றன. ‘விர்சுவல்’ வீடியோக்கள் மூலமாகவும் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு போட்டியின்போதும், வர்ணனையாளர்கள், மேட்ச் பிரசண்டர்கள், வீரர்கள்
என இந்த ஐபிஎல் சீசனைச் சுற்றியும் சிறிது பொதுநலம் தொற்றியுள்ளது பாராட்டத்தக்க
விஷயமே!




ஒருவர், உச்சக்கட்ட சோகத்தில் ஆழ்ந்திருக்கும்போது, இசை அவரை
ஆசுவாசப்படுத்துவது போல. பலருக்கும் ஒரு மருந்தாக இருப்பதுபோல, இந்த 4 மணி
நேர டி-20 போட்டியும் நமக்கு அப்படியான ஒன்றே தவிர, ஐபிஎல் தொடரினால் கள
நிலவரத்தில் இருந்து யாரும் திசை திரும்பவில்லை என்பதை கவனித்தில் கொள்ளலாம்.
நேற்று நடந்த போட்டியில், அப்படியான ஒரு போட்டியாகவே இருந்தது!
சென்னைக்கு எதிரான போட்டி பெங்களூரு ரசிகர்களுக்கு கவலை அளித்திருந்தாலும்,
சென்னை ரசிகர்களுக்கு கொண்டாட்டமாகத்தான் அமைந்தது.
பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என தனது கிரிக்கெட் கரியரில் அசத்தலான ஒரு ஆல்-
ரவுண்டிங் பர்ஃபாமென்சை கொடுத்த ஜடேஜா, சென்னை அணியின் வெற்றியை
எளிதாக்கினார்.




இந்த கொண்டாட்ட களிப்பு வெறும் போட்டி முடியும் வரை மட்டுமே என்பதும், பிறகு
நாட்டு நடப்பில் உள்ள களநிலவரங்களின் எண்ணங்கள் நம்மை
ஆட்கொண்டுவிடுகின்றன.


இது போன்ற நேரத்தில், நாம் செய்யவேண்டியதெல்லாம் ஒன்றுதான், ஒவ்வொருவரின்
விருப்பத்திற்கு தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டு, சக மனிதர்களுக்கு பக்க பலமாய்
இருப்போம், இதிலிருந்து ஒன்றாக மீண்டு வருவோம்!