இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டித் தொடரின் 10வது நாளான இன்று இந்திய வீரர்கள் பதக்க வேட்டை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், இன்று நடைபெற்ற ட்ரிபிள் ஜம்ப் போட்டியில் இந்தியாவின் எல்தோஸ் பால், அப்துல்லா நரங்கோலின் டெவிட் மற்றும் சித்ரவேல் ஆகியோர் களமிறங்கினர். இதனால், இந்தியாவிற்கு கண்டிப்பாக பதக்கம் கிடைக்கும் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர்.
ரசிகர்களின் நம்பிக்கை துளியளவிலும் ஏமாற்றமாகவில்லை. இந்த போட்டியில் இந்தியாவின் சார்பில் களமிறங்கிய மூவரும் மிரட்டலான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர். இந்தியாவின் எல்தோஸ்பால் 17.03 மீட்டர் தாண்டி முதலிடத்தைப் பிடித்தார். இதன்மூலம் நீளம் தாண்டுதலில் இந்தியா நடப்பு காமன்வெல்த் தொடரில் முதன்முறையாக தங்கப்பதக்கத்தை வென்று அசத்தியது.
அவருக்கு அடுத்த இடத்தை அப்துல்லா 17.02 மீட்டர் தாண்டி வெள்ளிப்பதக்கத்தை வென்றார். சித்ரவேல் 16.89 மீட்டர் தாண்டி நான்காவது இடத்தை பிடித்தார். பெர்முடா நாட்டின் பெரின்ஷீப் 16.92 மீட்டர் தாண்டி வெண்கலப் பதக்கத்தை வென்று அசத்தினார். தடகளப் போட்டிகளில் இந்திய வீரர்கள் நடப்பு காமன்வெல்த் போட்டியில் மிரட்டலான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகின்றனர்.
ட்ரிப்ள் ஜம்ப் போட்டியில் இந்தியா தங்கத்தையும், வெள்ளியையும் வென்று அசத்தியதற்கு ரசிகர்களும், மற்ற தடகள வீரர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்